முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்புடன் கள்ளத்தொடர்பா? வதந்திகளால் என் வளர்ச்சியை தடுக்க முடியாது:நிக்கி ஹாலே

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் :  அதிபர் டிரம்ப் உடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒவ்வொரு முறையும் பழி சொல்லுக்கு ஆளாகும் போது அதை எதிர்த்து அதிக பலத்துடன் போராடும் எண்ணம்தான் ஏற்படுகிறது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார் .

இந்த போராட்டத்தை நான் எனக்காக மட்டும் நடத்துவதில்லை என்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம், இதை எதிர்த்து இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று தோன்றுவதாக நிக்கிஹாலே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நிக்கி ஹாலே கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்காவில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மறுப்பு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகளான நிக்கி ஹாலே, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். 44 வயதான நிக்கி ஹாலேவுக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமை பெற்றவர். டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடன் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டார்.

நியூயார்க்கை சேர்ந்த மைக்கேல் வோல்ப் சமீபத்தில் எழுதிய 'பயர் அண்ட் பியூரி' என்ற புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நிக்கி ஹாலே கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதாக எழுதப்பட்டது. இது பற்றி அமெரிக்காவின் 'பொலிட்டிகோ' இதழுக்கு அளித்த பேட்டியில் நிக்கி ஹாலே விளக்கம் அளித்துள்ளார்.

அதிபர் டிரம்புடன் உறவு வைத்திருப்பதாக கூறுவது உண்மைக்கு மாறான மற்றும் அருவருப்பான விஷயம். நான் ஒருமுறை விமானத்தில் அதிபர் டிரம்புடன் பயணம் செய்தேன். ஆனால், விமானத்தில் வேறு சிலரும் பயணம் செய்தனர். நான் தனியாக பயணம் செய்ததாக கூறப்படுவது பொய்.

அமெரிக்க அதிபர் என்னுடன் பலமுறை தனித்திருந்ததாக எழுதப்பட்டுள்ளது. அப்படி ஒருபோதும் இருந்ததில்லை. எனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக நான் அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் டிரம்ப்புடன் அதிகமாக பேசியதாக மைக்கேல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எனது எதிர்காலத்தை பற்றி அவருடன் நான் ஒருபோதும் பேசியதில்லை. அந்த புத்தகத்தில் எழுதியிருப்பது உண்மையில்லை.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், கரோலினா மாகாண ஆளுநராக இருந்தபோதும், நான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளேன். இத்தகைய வதந்திகள் என்னுடைய வளர்ச்சியை ஒருபோதும் தடுக்காது என்று கூறியுள்ளார் நிக்கிஹாலே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து