முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் செயல்படும் லஷ்கர், தலிபான்களுக்கு ஆயுதம் வழங்குகிறது பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் தூதர் பகிரங்க குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

காபூல்: ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஆப்கனில் செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்காவுக்கான ஆப்கன் தூதர் மஜீத் கரார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தற்கொலைப் படை தீவிரவாதிகள் மூன்று இடங்களில் கொடூர தாக்குதல்களை நிகழ்த்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் மஜீத் கரார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் அமைதியை சீர்குலைப்பதற்காக தலிபான்களுக்கும், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கும் பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்து வருகிறது. அந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு ராணுவ உபகரணங்களை அது தொடர்ந்து வழங்கி வருகிறது.

குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் மெய்லாண்ட் ராணுவ தளத்தில் தாக்குல் நிகழ்த்திய தலிபான் தீவிரவாதிகள், இரவில் பார்க்கக்கூடிய கண்ணாடிகளை அணிந்திருந்தது தெரியவந்திருக்கிறது. இந்தக் கண்ணாடிகள் யாவும், பிரிட்டன் நிறுவனத்திடமிருந்து பாகிஸ்தான் ராணுவத்தால் வாங்கப்பட்டவை ஆகும். இவ்வாறு மஜீத் கரார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் தூண்டி வருவதாக இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில், அமெரிக்காவுக்கான ஆப்கன் தூதர் இவ்வாறு தெரிவித்திருப்பது சர்வதேச தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னதாக, தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து பாதுகாப்பான புகலிடம் அளித்து வருவதாக அமெரிக்கா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தது.

11 வீரர்கள் பலி
இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று அதிகாலையில் நடத்திய தாக்குதலில் ஆப்கன் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். காபூலில் உள்ள ராணுவத் தளத்தில் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து