முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாருக்கானின் பண்ணை வீடு முடக்கம் - வருமான வரித்துறை நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

மும்பை :  நடிகர் ஷாருக்கானின் அலிபாக் கடற்கரையை ஒட்டியுள்ள தேஜா வூ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்டை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. பினாமி சொத்து தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக டிசம்பர் மாதத்திலேயே ஷாருக்கானுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் உலக அளவில் புகழ் பெற்றவர். தற்போது அவர் மும்பை பாந்திரா, பேண்ட் ஸ்டாண்டு பகுதியில் இருக்கும் மன்னத் பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மஹராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் கடற்கரை அருகே 1 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவருடன் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த பண்ணை வீட்டை தான் வருமான வரித்துறையினர் நேற்று முடக்கியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் இந்த சொத்து முடக்கம் உண்மையான தகவல் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரிவு 24ன் கீழ் பினாமி சொத்து யாருக்கு தொடர்புடையதோ அவர் யார் என தெரியும் பட்சத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். நோட்டீஸ் அனுப்பிய 90 நாட்களுக்கு அந்த சொத்தை முடக்குவதற்கு சட்டத்தில் இடம் இருப்பதாக அதிகாரி சுட்டி காட்டுகிறார்.

ரூ. 14.67 கோடி மதிப்பு பண்ணை வீடு

 இதன்படி ஷாருக்கானிற்கு கடந்த டிசம்பர் மாதமே வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதன் அடிப்படையில் அலிபாக் கடற்கரை நகரில் உள்ள பண்ணை வீட்டை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். வருமான வரித்துறை முடக்கியுள்ள சொத்தின் மதிப்பு ரூ. 14 கோடியே 67 லட்சம் என்றும் சந்தை மதிப்பில் இது 5 மடங்கு அதிக விலைக்கு போக வாய்ப்புள்ளதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீச்சல் குளம், ஹெலிபேட் வசதி கொண்ட வீடு

 ஷாருக்கானின் இந்த பண்ணை வீடானது 19 ஆயிரத்து 960 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. நீச்சல் குளம், கடற்கரை மற்றும் தனி ஹெலிபேட் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் இந்த சொத்து குறித்து ஷாருக்கான் தரப்பில் முறையான பதில் அளிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறையினர் கூறுகின்றனர்.

ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு ஜனவரி 24ல் ஈமெயில் மூலம் நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயத்திற்காக வாங்கி கட்டிய ஷாருக்கான்

பண்ணை வீடு தொடர்பாக ஷாருக்கான் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டே விவசாயம் செய்வதற்காக நிலத்தை வாங்கி விட்டு அதில் பண்ணை வீட்டை தனது சொந்த பயன்பாட்டிற்காக கட்டிக் கொண்டார் என்பது தான். எனவே பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ் தேஜா வூ பார்ம்ஸ்ன் பினாமியாக செயல்பட்டு அதன் பலன்களை அனுபவித்ததன் பேரில் ஷாருக்கானின் பண்ணை வீடு முடக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கிய பண்ணை வீடு

ஏற்கனவே 2016ம் ஆண்டில் இந்தப் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதை கண்டுபிடித்து அதிகாரிகள் இயந்திரம் மூலம் அவைகளை அகற்றினர். இதில் ஷாரூக்கின் பண்ணை வீடும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து