காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி அமைச்சர்களுடன் சென்று சித்தராமையாவை சந்திக்க முதல்வர் எடப்பாடி திட்டம் நாள் மற்றும் நேரம் ஒதுக்கக்கோரி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      தமிழகம்
edapadi cm 2017 09 30

சென்னை: சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி டெல்டா மாவட்ட அமைச்சர்களுடன் சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக நாள் மற்றும் நேரம் ஒதுக்கக் கோரி கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கர்நாடக முதல்வரின் முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர்களுடன் ஆலோசனை
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்த காரணத்தினால், டெல்டா மாவட்ட பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, டெல்டா மாவட்ட சம்பா பயிரை காப்பாற்றும் நோக்கில் காவேரி நீரை திறந்து விட கர்நாடகா அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,மூத்த அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சித்தராமையாவை சந்திக்க திட்டம்
இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்கள் பெங்களூரூ சென்று கர்நாடகா முதல்வர்  சித்தராமையாவை நேரில் சந்தித்து, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி சம்பா பயிரை காப்பாற்ற, காவேரி நீரை திறந்துவிட வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக, கர்நாடக மாநில முதல்வரிடம், தமிழக முதல்வர் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர்கள் நேரில் சென்று வலியுறுத்த நாள் மற்றும் நேரம் ஒதுக்கக் கோரி, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கர்நாடக முதல்வரின் முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


அமைச்சர்கள் பங்கேற்பு
இந்தக் கூட்டத்தில்,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்  சி. சீனிவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயகுமார், உணவுத் துறை அமைச்சர் காமராஜ்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், வேளாண்மைத் துறை அமைச்சர்  துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர்,  காவேரி தொழில் நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியன், நீர்வள ஆதாரத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் பக்தவத்சலம்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து