ஆர்.எஸ்.மங்கலத்தில் மனிதநேய வார நிறைவு விழா

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      ராமநாதபுரம்
30 rmd news

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வாரநிறைவு விழா கலெக்டர் முனைவர்ந டராஜன் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், வடவயல் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- சமுதாயத்தில் சக மனிதரிடத்தில் ஏற்றத்தாழ்வு பாராமல், அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடும், மனிதநேயமிக்க உள்ளத்தோடும் இருத்தல் என்பதே ஒவ்வொரு மனிதனின் அடிப்படை குணமாக இருக்க வேண்டும். அந்த வகையில் தீண்டாமையை ஒழித்தல், சாதி,மத வேறுபாடுகளை களைதல் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக மனிதநேய வாரவிழா கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 
 மேலும் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  மாவட்டத்தில் மொத்தம் 11 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், 40 ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.       2016-2017-ஆம் நிதியாண்டில் கல்வி உதவித்தொகையாக பல்வேறு திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் 29ஆயிரத்து 500 நபர்களுக்கு ரூ.13.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1386 மாணவர்களுக்கும், 1733 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தீருதவித் தொகையாக 37 நபர்களுக்கு மொத்தம் ரூ.45 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சமுதாய நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் வாழும் கிராமமாக பரமக்குடி வட்டத்தில் உள்ள கள்ளிக்குடி கிராமம் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
  மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனைப் பாதுகாத்திடும் வகையில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  விஷன் 2022 திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தினை இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒரு மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் சாதி,மத வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடன் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிய வேண்டும். இவ்வாறு பேசினார். பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுpஜிபிரமிளா, காவல் துணைக்கண்காணிப்பாளர் (மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி) ஏ.பிலிப் கென்னடி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து