திருமங்கலம் ரயில்நிலையத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம்: ரயில்வே போலீஸ் அவுட்போஸ்ட் அமைத்திட பயணிகள் கோரிக்கை:

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      மதுரை
30 tmmm news

திருமங்கலம்- திருமங்கலம் ரயில்நிலையம் பகுதியில் நடமாடிடும் சமூக விரோதிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் அட்டகாசத்தால்  ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.இதையடுத்து திருமங்கலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் அவுட் போஸ்ட் அமைத்து பாதுகாப்பு வழங்கிடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள ரயில்நிலையம் திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகா பொதுமக்கள் பயன்படுத்திடும் முக்கியமான இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்தின் முன்புறம் பல ஏக்கர் பரப்பளவில் ரயில்வேக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது.இந்தநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏராளமான மரக்கன்றுகள் ரயில்வே நிர்வாகத்தால் நடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த இடம் சமூகவிரோதிகளின் புகலிடமாகவும், அப்பகுதி மக்களின் திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறிவிட்டது.இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் ரயில் நிலையத்திற்கு செல்கின்ற பயணிகள் முகம்சுளித்தபடி செல்லவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஏர்போர்ட் ரோட்டிலிருந்து ரயில்நிலையத்திற்கு சென்றிடும் ஒத்தையடி சாலையில் ஏராளமான மின்விளக்கு வசதிகள் முதலில் செய்யப்பட்டு இருந்தது.ஆனால் தற்போது அந்த பகுதியில் இரவு நேரங்களில் நடமாடிடும் சமூகவிரோதிகளும் ஓரினச் சேர்க்ககையாளர்களும் தங்களது வசதிக்காக   சாலையோரமிருந்த மின்விளக்குகளை உடைத்து நாசமாக்கிவிட்டனர்.
இதனால் இரவு நேர ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரயில்நிலையம் செல்வதற்கு தங்களது உயிரை கையில் பிடித்தபடி நடந்து செல்லவேண்டி இருக்கிறது. சிலசமயங்களில் ரயில்நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மீது காலியான மதுபாட்டில் களை வீசி சமூகவிரோதிகள் அட்டகாசம் செய்கின்றனர். இவற்றுக்கெல்லாம் மேலாக இரவுநேரங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் பிளாட்பாரங்களின் வடக்கு கடைசி பகுதி சமூகவிரோதிகளின்   திறந்தவெளி பாராக மாறிவிட்டது.அதே போல் ரயில் நிலையம் தென்பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் தினமும் இரவு நேரங்களில் முகாமிடும் ஓரினச் சேர்க்கையாளர்கள் சிலர் அவ்வழியே வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கவர்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி வருகின்றனர்.இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்கள் பரவும் அபாயம் எற்பட்டுள்ளது.எனவே திருமங்கலம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்திடும் வகையில் ரயில்வே போலீசார் ரோந்தினை அதிகப்படுத்தி சமூக விரோதிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வர ரயில்வே போலீஸ் அவுட் போஸ்ட் அமைத்திட வேண்டும் என ரயில் பயணிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து