71-வது நினைவு நாள்: காந்தி சிலைக்கு கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      தமிழகம்
CM-Deputy CM tribute 2018 1 30

சென்னை : மகாத்மா காந்தியடிகளின் 71-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தலைமைச் செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாசிக்க, அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்றனர். தமிழகம் முழுவதும் போக்குவரத்தை நிறுத்தி 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மவுன அஞ்சலி


மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 11 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல்வர் மரியாதை

மகாத்மா காந்தியடிகளின் 71-வது நினைவு நாளையொட்டி சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உறுதிமொழி ஏற்பு

அதன்பின்னர் தமிழக அரசின் சார்பில் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தலைமை செயலக ராணுவ அணி வகுப்பு மைதானத்தில் நடைபெற்றது. அங்கு காந்தியடிகளின் திருஉருவ சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரோஜா பூ தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.  தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காலை 11 மணிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து