ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆய்வு

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Nirmala Sitharaman

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலாசீதாராமன் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்டத்தை விஷன் 2022 திட்டத்தின் கீழ் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தொடர்பாக நடைபெற்ற அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ஆகியோர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார்கள். இக்கூட்டத்தில் மத்திய வழிகாட்டுதல் அலுவலர் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலருமான எஸ்.கோபாலகிருஷ்ணன், மாநில வழிகாட்டுதல் அலுவலர் உணவுப்பாதுகாப்பு துறை ஆணையாளருமான பி.அமுதா, மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
 இந்திய அரசு அறிவித்துள்ளபடி, 2022ல், முன்னேற்றமடைந்த புதிய இந்தியாவை நாம் காண வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்திய நாட்டில் உள்ள வளர்ந்து வரும் மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றின் சமூக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 115 மாவட்டங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்கள்;  தேர்வு செய்யப்பட்டுள்ளன.  அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக ஊரகப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தி தனிநபர் இல்லக் கழிப்பறைகள் பயன்பாட்டினை அதிகரித்து முழு சுகாதார மாவட்டமாக அறிவிப்பு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 இதுதவிர மாவட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண்மை நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.  குறிப்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வரும் மண்வள அட்டைகள் வழங்கும் திட்டம் குறித்தும், குறைந்த நீர்;பாசனத்தில் அதிக மகசூல் ஏற்படுத்தும் வேளாண் நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுகாதார துறையின் மூலம், பிரசவத்தின் போது ஏற்படும் சிசு மரணம், மற்றும்  கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்களை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  அதேபோல முத்ரா திட்டத்தின் கீழ் சிறு தொழில் புரிவோர்களுக்கு வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்த மத்திய மந்திரி  மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் முழுமையாக கொண்டு சேர்த்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் பிணையம் பிணையமில்லாமல் கடன் வழங்கிடும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ள முத்ரா திட்டத்தினை வங்கிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தி, இத்திட்டத்தின் பலன் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  விஷன் 2022 திட்டத்தின் கீழ் மாவட்டங்களில் உள்ள அனைத்து துறைகளும் நடைமுறைப்படுத்திடும் திட்டங்களை செம்மைப்படுத்தி புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி மேற்குறிப்பிட்ட கூறுகளை மேம்படுத்தி, ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கணக்கிடப்பட்டு தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  தெரிவித்தார்.
 இக்கூட்டத்தில் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு.தி.மோகன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் இந்திராகாந்தி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்;கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து