அ.தி.மு.க. புதிய உறுப்பினர்களை சேர்க்கும் விண்ணப்பம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      மதுரை
  new members

மதுரை,- மதுரை புறநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க.புதிய உறுப்பினர்களை சேர்க்கும் விண்ணப்ப படிவத்தை நிர்வாகிகளிடம் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று வழங்கினார்.
அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உறுப்பினர்களுக்கான புதுப்பித்தல் ஆகிய விண்ணப்ப படிவங்களை  அ.தி.மு.க.நிர்வாகிகளிடம் வழங்கி தொடங்கி வைத்தனர். அதனையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் கழக நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மதுரை புறநகர் மாவட்ட  அ.தி.மு.க. செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். மாநில அம்மா பேரவைச் செயலாளரும், வருவாய்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் நிர்வாகிகளிடம் விண்ணப்பப்படிவத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே. போஸ், கே. மாணிக்கம், பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மா.இளங்கோவன், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, தக்கார்பாண்டி, வெற்றிச்செழியன், கே. முருகேசன், ரவிச்சந்திரன், ராமகிருஷ்ணன், அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.என். ராஜேந்திரன், ஐயப்பன், அம்பலம், பஞ்சம்மாள், பஞ்சவர்ணம் மற்றும் அணி நிர்வாகிகள் கே. தமிழரசன், வக்கீல் தமிழ்செல்வம், வக்கீல் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-
ஏழை, எளிய மக்களுக்காக 17.10.1972ம் ஆண்டு இவ்வியக்கத்தை  எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதன்பின் அம்மா இந்த இயக்கத்தை இந்தியாவில் மூன்றாவது இயக்கமாக உருவாக்கினார். எம்.ஜி.ஆர்.மறைவின் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அம்மா 1 ½ கோடி தொண்டர்களை உருவாக்கி யாராலும் அசைக்க முடியாத மாபெரும் இரும்புக் கோட்டையாக கழகத்தை உருவாக்கினார்.
அதன்படி தற்போது இயக்கத்தை வலுபெரும் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலுக்கான புதிய விண்ணப்ப படிவத்தை சென்னையில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கழக நிர்வாகிகளும் வழங்கி தொடங்கி வைத்துள்ளனர். பல்வேறு விமர்சனங்களை மீறி இந்த விண்ணப்பப்படிவம் அன்றே 1 லட்சம் அளவில் கழக நிர்வாகிகள் வாங்கி சென்று உள்ளனர் என்ற வரலாறு படைத்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் சாமானியன் முதலமைச்சராக ஆள முடியும் என்ற எடுத்துக்காட்டு என்றால் அது கழகத்தையே சாரும். அதே போல் இந்தியாவிலேயே தொண்டனே கட்சியை வழிநடத்தலாம் என்றால் அது இயக்கத்தையே சாரும். அம்மாவின் ஆன்மா ஆசி நமக்கு இங்கு உள்ளது. அம்மா கற்று கொடுத்த இலக்கணப்படி கட்சிக்கொடி, கட்சிசின்னம், ஆகியவை எங்கு உள்ளதோ அங்கே தான் தொண்டர்கள் இருப்பார்கள்.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் இலக்காக வைத்து கழக நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் புடம் போட்ட தங்கமாக அம்மாவின் அரசை ஏற்றுக்கொண்டு கழகத்திற்கு போர் வீரர்களாக திகழும் இளைஞர் பட்டாளத்தை நாம் கழகத்தில் சேர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து