வேடசந்தூரில் சிறுமியை நிலாப்பெண்ணாக உருவகப்படுத்தி வழிபாடு செய்த கிராம மக்கள்

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      திண்டுக்கல்
nilla -vdsmoon  31 1 18

திண்டுக்கல், -திண்டுக்கல் அருகிலுள்ள வேடசந்தூரில் சிறுமியை நிலாப்பெண்ணாக உருவகப்படுத்தி கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள தேவிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று நிலாப்பெண் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த வயதுக்கு வராத ஒரு சிறுமியை தேர்வு செய்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிலாப்பெண்ணாக தண்டபாணி என்பவரது மகள் கல்பனாதேவி(11) தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு புத்தாடைகள் அணிவித்து மலைக்கரடுக்கு பெண்களும், சிறுமியின் தோழிகளும் அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியை ஆவாரம்பூ மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள அம்மன் கோவில் முன்பு அமர வைத்து தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை ஒரே பாத்திரத்தில் போட்டு கலவை சாதமாக்கினார். அந்த உணவை உருண்டைகளாக்கி அனைவரும் சாப்பிட்டனர்.
அதன்பின் கோவில் முன்பு நிலாப்பெண்ணை அமர வைத்து கும்மியடித்து பாட்டு பாடினர். அதனையடுத்து மற்றொரு அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று விளக்கேற்றி வழிபாடு செய்தனர். நிலா வெளிச்சத்தில் அந்த சிறுமியை ஊர்வலமாக அழைத்து வந்து முடிவில் அங்குள்ள குளத்தில் ஆவாரம்பூக்களை மிதக்க விட்டு அதன்மீது தீபமேற்றி வழிபாடு நடத்தினர். அதன்பின் அனைவரும் நிலாப்பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல ஆண்டுகளாக தைப்பூசத்தன்று இதுபோன்ற வழிபாட்டை செய்து வருகிறோம். இங்குள்ள அம்மனை குளிர்விக்கும் வகையில் தைப்ஞீசத்தன்று எங்கள் பகுதியைச் சேர்ந்த சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு வழிபாடு நடத்துகிறோம். இதனால் இப்பகுதியில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும், நோய் நொடிகள் எதுவும் எங்களை அண்டாது. குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து வருகிறது. இந்த வழிபாட்டில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து