இடைக்கால நிவாரணமாக 90 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      தமிழகம்
thangamani minister 2017 9 19

சென்னை : ஊதிய உயர்வு அளிக்கப்படும் வரை 90 ஆயிரம் மின்வாரிய ஊழியரகளுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.10 ஆயிரமும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தலைமைச் செயலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உயர்விற்கான கோரிக்கை...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு 1.12.2015 முதல் ஊதிய ஒப்பந்தம் முடிந்து புதிய ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டியதற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று மின்சார வாரியத்திற்கும்,  தொழிலாளர்களுக்கும் இடையே சிறு கருத்து வேறுபாடு கூட இல்லாமல் தொடர்ந்து சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் 2.57 சதவீதம் உயர்விற்கான கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒப்பந்தம்

வேலைப்பளுவினுடைய பேச்சுவார்த்தைக்குசிறிது காலம் ஆகின்ற காரணத்தினால், பணியாளர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக 2500 ரூபாயும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 1250 ரூபாயும் முதல்வரின் ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது. இதனால், பணியில் இருக்கின்ற 90000 பணியாளர்களுக்கும், ஓய்வு பெற்றிருக்கின்ற 95000 பணியாளர்களுக்கும் அக்டோபர் 2017 முதல் ஜனவரி 2018 வரையிலான 4 மாதத்திற்கு உண்டான தொகையாக பணியாளர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக 10000 ரூபாயும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 5000 ரூபாயும் உடனடியாக இரண்டு தினங்களில் முழுமையாக அவர்களுக்கு கிடைக்கின்ற வகையில், அவர்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

வரவில்லை

வேலைப்பளுவினுடைய பேச்சுவார்த்தை முடிந்தவுடன் முழுமையாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும். இதனால், மின்சார வாரியத்திற்கு 136 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்பொழுது முழுமையான உயர்வின் சதவீதம் என்ன என்பது தெரிவிக்கப்படும். தி.மு.க. உட்பட அனைத்து சங்கங்களும் இதனை ஏற்றுக்கொண்டார்கள். சி.ஐ.டி.யு மட்டும் வரவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக முடிக்கவேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறார்கள். சிஐடியு-வை அழைத்திருந்தோம், ஆனால் அவர்கள் வரவில்லை.

நான்கு வருடத்திற்கு...

இருந்தாலும், நாளையோ அல்லது நாளைமறுதினமோ மறுபடியும் அவர்களை அழைத்து திறந்த மனதோடு பேசுவதற்கு, எந்தநேரமும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்வோம். அரசு எப்பொழுதும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். அம்மாவினுடைய அரசு, தொழிலாளர்களுடைய அரசு என்பதை இந்த நேரத்தில் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். இப்பேச்சுவார்த்தையானது நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுகிறது என்றார் அவர்.

கேள்வி: 2015-ல் நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை இப்பொழுதுதான் நடைபெறுகிறதா?

பதில்: தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏழாவது ஊதிய உயர்வு தற்பொழுதுதானேமுடிந்துள்ளது. ஏழாவது ஊதிய உயர்வு முடிந்தபின்பு தானே இந்த பேச்சுவார்த்தை நடத்தமுடியும். இந்த பேச்சுவார்த்தை இந்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கின்றோம். அவர்களும் ஏற்றுக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து