முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுநிலையான வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடுநிலையான, வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட் என்று மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சென்னைக்கு புறநகர் ரயில்கள் பற்றி அறிவிப்பு இல்லாதது குறித்து தனது கவலையை தெரிவித்துள்ள முதல்வர், சென்னை நகருக்கு புறநகர் ரயில்களை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் வேளாண்துறை, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரதுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,

நிதியமைச்சருக்கு...

2018-19-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தற்போதைய அரசின் பா.ஜ.க. அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் மட்டுமல்ல, ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டும் ஆகும். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சரை பாராட்டுகிறேன். காரணம் இதில், வேளாண் மற்றும் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் பயன்பெறும்

வேளாண்மைத்துறையில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஒதுக்கப்பட்ட நிதிகள் உடனடியாக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள மெகா உணவுப் பூங்கா திட்டத்தால் தமிழகம் பயன்பெறும். அனைத்துவிதமான பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரிதும் பலனளிக்கும். ஆனால் இதை அமுல்படுத்துவது மிகப்பெரிய சவாலான ஒன்று. மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை அமைத்திருப்பது மற்றும் கால்நடைதுறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை அமைத்திருப்பது வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

சென்னை நகருக்கு...

விவசாயப் பொருட்களுக்கான ஏற்றுமதியை தாராளமயமாக்கிருப்பதை வரவேற்கிறோம். உள்கட்டமைப்பு தேவைக்களுக்காக மூலதனங்களை அதிகரித்திருப்பது வரவேற்க்கதக்கது. மும்பை, பெங்களூரு நகரங்களில் புறநகர் ரயில்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னை போன்ற வளர்ந்து வரும் நகரங்களுக்கு புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம். ஆனால் பட்ஜெட்டில் அது தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே சென்னை நகருக்கு புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேசிய வீட்டுவசதி வங்கியில் வீட்டுக்கான நிதியை எளிதில் பெறும் வகையில் அரசியலமைப்பு அமைத்திருப்பது வரவேற்க்க வேண்டிய ஒன்று.

தமிழகம் முன்னோடி....

முதலமைச்சரின் விரிவான மருத்தவ காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதேபோல மத்திய அரசும் தற்போது தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு அறிவித்துள்ளதை நான் பாராட்டுகிறேன். ரூ.250 கோடிக்கு குறைவான வரவு செலவுள்ள கம்பெனிகளுக்கு 25 சதவீதமாக கார்ப்பரேட் வரியை குறைத்து மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது தொழில்துறையை ஊக்குவிக்கும். மூத்த குடிமக்களுக்கான வட்டியில் வரிச்சலுகை அறிவித்திருப்பது வரவேற்க்கத்தக்கது. அதேபோல மாத சம்பளம் பெறுவோருக்கும் வரிசுமையை குறைக்க வேண்டும். இருப்பினும் ரூ.40 ஆயிரம் நிரந்தர கழிவு அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.

வளர்ச்சிக்கான...

இந்த பட்ஜெட்டில் வேளாண்துறை, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரத்துறை மற்றும் கம்பெனிகளின் நலன், உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ காப்பீட்டுத்திட்டம், முதியோர் நலன் ஆகியவற்றிற்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கான நடுநிலையான பட்ஜெட். இது நாட்டின் பொருதார வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்று நம்புகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து