சிவரக்கோட்டை காட்டுப் பகுதியில் பயங்கர 'தீ" -200ஏக்கர் விளைநிலங்கள் எரிந்து நாசம்:

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      மதுரை
sivarakottai fire-2 2 18

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா சிவரக்கோட்டை காட்டுப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயின் காரணமாக 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் எரிந்து நாசமானது.இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் நிண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இருப்பினும் தீப்பிடித்து எரிந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்து வருகிறது.
திருமங்கலம் தாலுகா சிவரக்கோட்டை கரிசல்காளம்பட்டி சுவாமிமல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் 2500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளது.இங்கு சிறுதானியங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படவதால் சிறுதானியங்களின் களஞ்சியம் என சிவரக்கோட்டை அழைக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதிகளில் பயிடப்பட்டிருந்ததுவரை பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்தது.அவ்வாறாக அறுவடை செய்யப்பட்டு கதிரடிக்கப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த துவரைமார்களில் நேற்று மதியம் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.சற்று நேரத்தில் விளைநிலங்களுக்கு பரவிய தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது.இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடன் பணியில் ஈடுபட்டிருந்த வர்களை உடன் அழைத்துக் கொண்டு தீயை அணைத்திடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
எனினும் காற்று பலமாக வீசியதால் தீ கட்டுப்படாமல் பரவியபடி இருந்துள்ளது.இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருமங்கலம்,கள்ளிக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வணிடிகளுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்திடும் பணியில் ஈடுபட்டனர்.அதே சமயம் சிவரக்கோட்டை மற்றும் கரிசல்காளம்பட்டி பகுதி பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டு தீ பரவிச் செல்லும் பகுதிகளை சுத்தம் செய்தும் தண்ணீர் ஊற்றி அணைத்திடும் முயற்சியில் களமிறங்கி போராடினார்கள்.இதையடுத்து சுமார் 5மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிவரக்கோட்டை பகுதியில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தீயை முழுமையாக அணைப்பதற்குள்ளாக சுமார் 200ஏக்கர் விளைநிலமும் அதில் பயிரிடப்பட்டிரந்த துவரை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களும் முற்றிலுமாக எரிந்து நாசமாகி விட்டது.மேலும் சிவரக்கோட்டை மலையூரணி பகுதியில் இருந்த தேக்கு,வேம்பு மற்றும் இதர பலன்தரும் மரங்களும் எரிந்து சாம்பலாகி விட்டது.
தீயணைப்பு துறையினருக்கு உதவியாக பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து போராடியதன் பலனாக 2000ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தானிய பயிர்கள் பாதுகாக்கப் பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.இருப்பினும் காற்றின் வேகத்தால் தீப்பற்றி எரிந்த பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.இதுபற்றி வருவாய்த்துறை,வேளாண்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து