முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மவுன்ட் மாங்கானு: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்ச்சை நடத்துகின்றன.

இந்தியா- ஆஸ்திரேலியா
நியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்துவிட்டது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், அரைஇறுதியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

தோல்வியே சந்திக்காத...
இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மவுன்ட் மாங்கானு ஸ்டேடியத்தில் இன்று கோதாவில் இறங்குகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். பேட்டிங்கில் கேப்டன் பிரித்வி ஷா (232 ரன்), சுப்மான் கில் (சதம் உள்பட 341 ரன்), பந்து வீச்சில் அன்குல் ராய் (12 விக்கெட்), ஷிவம் மாவி (8 விக்கெட்), கம்லேஷ் நாகர்கோட்டி (7 விக்கெட்), இஷான் போரெல் (4 விக்கெட்) சூப்பர் பார்மில் இருக்கிறார்கள். ஏற்கனவே 2000, 2008, 2012-ம் ஆண்டுகளில் இந்திய அணி இந்த கோப்பையை வென்று இருக்கிறது. இந்த முறையும் வாகை சூடினால், அதிக முறை ஜூனியர் உலக கோப்பையை ருசித்த அணி என்ற சாதனையை படைக்கும்.

டிராவிட் பயிற்சியாளர்
இந்திய அணிக்கு, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பது சாதகமான அம்சமாகும். 2016-ம் ஆண்டு அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி இறுதிஆட்டம் வரை முன்னேறி வெஸ்ட் இண்டீசிடம் தோற்று இருந்தது. தவறுக்கு இடமளிக்காமல், பதற்றமடையாமல் எப்படி ஆட வேண்டும் என்று இளம் படைக்கு டிராவிட் நிறைய அறிவுரை வழங்கியுள்ளார். லீக் சுற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பலமிக்க ஆஸி...
ஏற்கனவே 1988, 2002, 2010-ம் ஆண்டுகளில் மகுடம் சூடியிருக்கும் ஆஸ்திரேலியாவும் சாதனை நோக்கியே பயணிக்கிறது. கேப்டன் ஜாசன் சங்ஹா (216 ரன்), ஜாக் எட்வர்ட்ஸ் (188 ரன்), ஆல்ரவுண்டர் நாதன் மெக்ஸ்வீனி (188 ரன்) உள்ளிட்டோர் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகளை சாய்த்து உலக சாதனை படைத்த லாய்ட் போப் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு அஸ்திரமாக இருக்கிறார். லீக்கில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியாவும் வரிந்து கட்டி நிற்கும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளையோர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 34 ஆட்டங்களில் 20-ல் இந்தியாவும், 14-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டிருக்கிறது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பாக்.கிற்கு 3-வது இடம்
முன்னதாக குயின்ஸ்டவுன் நகரில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று முன்தினம் நடக்க இருந்த 3-வது இடத்துக்கான ஆட்டம் மழை காரணமாக ‘டாஸ்’ கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. லீக் சுற்றில் ரன்-ரேட்டில் முன்னிலையில் இருந்ததன் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் 4-வது இடத்தை பெற்றது. ஜூனியர் உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த நிலை இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து