கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அதிக நீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      தமிழகம்
Kandaleru dam 2017-12 31

ஊத்துக்கோட்டை: கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட ஆந்திர அரசின் தெலுங்கு கங்கை திட்ட தலைமை பொறியாளர் ஒத்துகொண்டதையடுத்து பூண்டி ஏரிக்கு அதிக தண்ணீர் வந்து சேர வாய்ப்பு உள்ளது.

2400 கனஅடி தண்ணீர்...
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த டிசம்பர் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 2-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. தற்போது கண்டலேறு அணையில் வினாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் உரிஞ்சி விடுவதால் பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 300 லிருந்து 350 கனஅடி தண்ணீர் மட்டும் தான் வந்து சேருகிறது.

தமிழக அதிகாரிகள் குழு...
இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை விடுக்க தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் குழு வியாழனன்று திருப்பதி சென்றது. இக்குழுவில் நீர்வள ஆதார சென்னை மண்டல தலைமை பொறியாளர் முருகுசுப்பிரமணியன், கண்காணிப்பு பொறியாளர் மணி, செயற்பொறியாளர் சீனிவாசராவ், உதவி செயற் பொறியாளர் அரசு, உதவி பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

தண்ணீர் திறக்க கோரிக்கை
இவர்கள் ஆந்திர அரசின் தெலுங்கு கங்கை திட்ட தலைமை பொறியாளர் முரளி நாதரெட்டியை சந்தித்து நேற்று பேச்சுவார்தை நடத்தினர். விவசாயிகளின் தண்ணீர் திருட்டு, சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கண்டலேறு அணையில் 68 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 13.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஆகையால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அதிகாரிகள் குழு கோரிக்கை வைத்தது.

கூடுதல் தண்ணீர் திறக்க...
நேற்று இரவு வரை நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட முரளிநாத ரெட்டி ஒத்துகொண்டார். கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க அங்கீகரித்தார்.இதனால் பூண்டி ஏரிக்கு ஓரிரு நாட்களில் வினாடிக்கு 500 முதல் 600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர வாய்ப்பு உள்ளது. இதற்கு தமிழக அதிகாரிகள் குழு நன்றி தெரிவித்து கொண்டது.

பற்றாக்குறை ஏற்படாது
இதனிடையே கடந்த 2-ந் தேதி முதல் நேற்று இரவு வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 750 மில்லியன் கனஅடி (75 டி.எம்.சி.) தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி வருடந்தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூண்டி ஏரிக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் ஆந்திர அரசு வழங்க வேண்டும். இந்த ஆண்டு அது சாத்தியமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க பெற்றால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து