காவிரி பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திப்போம் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேட்டி

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      தமிழகம்
ops

சென்னை: கபினியில் போதுமான நீர் இருக்கிறது .இதனால் 7 முதல் 10 டி.எம்.சி வரையிலான தண்ணீரைத் தர வேண்டும் என்று தான் கேட்டிருந்தோம். தர முடியாது என்று கர்நாடகா மறுத்திருக்கிறது, இதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று  தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது :
அரசுப் பணியில் இருப்பவர்கள், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பணி நேரத்தில் தவறு செய்தால் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக மக்களின் உரிமைகளுக்கு பங்கம் ஏற்பட்டால் அதை தட்டிக் கேட்கும் முதல்வராகத் தான் ஆட்சி நடத்தினார்.

ஜெயலலிதா வழியில் நாங்களும் மக்களுக்கு பிரச்னையை உருவாக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு இருந்தால் அதனை திருத்திக் கொள்ள மத்திய அரசுக்கு கூறுவோம். யார் தவறு செய்தாலும் அதனை தட்டிக் கேட்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது.

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திட்டங்களின் அடிப்படையில் மற்ற மாநிலங்களுக்கு என்ன பங்கீடு அளிக்கிறார்கள், தமிழகத்திற்கு என்ன மாதிரியான பங்குகள் அளிக்கப்படுகிறதா என்பதை பார்த்து நாங்கள் முழு விவரங்களை மத்திய அரசுக்கு தெரிவிப்போம். எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி தேவையான நிதியைப் பெறுவோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது ஏன் என்று முழு விசாரணைக்குப் பின்னர் தான் தெரியவரும். ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், வருவாய்த்துறை அமைச்சரும், அறநிலையத்துறை அமைச்சரும் நேரில் பார்வையிட சென்றுள்ளனர். அவர்கள் தீ விபத்து குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் என்னுடைய ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை என்று சொல்வது தவறு. தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

காவிரி நீர் வழக்கை 15 ஆண்டுகளாக விசாரித்த நீதிமன்றம் கர்நாடகா, கேரளா, தமிழகத்திற்கு எவ்வளவு நீர் என்று இறுதித் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பின் படி தான் நமக்கு உள்ள தமிழகத்திற்கான நீரை கேட்டு வருகிறோம். ஆண்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீர் மாதவாரியாக பிரித்துத் தர வேண்டும்.

இன்று வரை 81 டி.எம்.சி நீர் பாக்கி இருக்கிறது, காவிரி டெல்டா பகுதியில் 8 டி.எம்.சி வரை தண்ணீர் தந்தால் தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும். கபினியில் போதுமான நீர் இருக்கிறது அதனால் 7 முதல் 10 டி.எம்.சி வரையிலான தண்ணீரைத் தர வேண்டும் என்று தான் கேட்டிருந்தோம். தர முடியாது என்று கர்நாடகா மறுத்திருக்கிறது, இதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து