முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுங்கள் - மின்சார வாரிய சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினருக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது என்றும், அதற்கான கதவு திறந்தே உள்ளது என்றும், வேலைநிறுத்தப் போராட்ட  அறிவிப்பை வாபஸ் பெறுங்கள் என மின்சார வாரிய சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினருக்கு மின்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில், மின் துறை அமைச்சர் தங்கமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மின்மிகை மாநிலம்...

2010, 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்கின்ற பொழுது, தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அதற்கு காரணம், கடந்த கால ஆட்சியில் புதிய மின் திட்டங்களும், நிறுவு திறனை ஏற்படுத்தாததும், பராமரிப்பு பணி சரியாக இல்லாததும் ஒரு காரணம் என்பதை ஜெயலலிதா தெளிவாக எடுத்துரைத்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்கிக் காட்டுவேன் என்று தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா சொன்னார். அதே போல, இன்றைய தினம் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலைமையை ஜெயலலிதா உருவாக்கித் தந்திருக்கின்றார்.

பல்வேறு சலுகைகள்...

அவர் வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான அரசும் இன்றைய தினம் தமிழக மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக, மின்சார வாரியத்திற்கு முன்னுரிமை அடிப்படையில், பல்வேறு சலுகைகளை வழங்கி வந்து கொண்டிருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் என்பது அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

பேச்சுவார்த்தையில்...

இந்த நிலையில், மின்சார வாரிய தொழிலாளர்களோடு பலகட்ட பேச்சுவார்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு தினங்களுக்கு முன்பாக, சி.ஐ.டி.யூ சங்கங்களைத் தவிர, அனைத்து சங்கங்களும் இங்கே வந்து வேலைப்பளுவினுடைய ஒப்பந்தம் இன்னும் ஏற்படாத காரணத்தினால், அதை பேசி முடிப்பதற்கு சிறிது காலம் ஆகும் என்ற காரணத்தினால், தொழிலாளர்களுக்கு இப்பொழுது இடைக்கால நிவாரணம் வழங்கலாம் என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இரண்டு சங்கங்கள்...

இதற்கு தி.மு.க உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்புக்கொண்டு அதற்காக 2017 அக்டோபரிலிருந்து 2018 ஜனவரி வரை மாதம் 2500 ரூபாய் வீதமாக 4 மாதங்களுக்கும் ஒரே முறையாக 10,000 ரூபாய் கொடுப்பதாக நாங்கள் கூறினோம். அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல ஓய்வு பெற்றவர்களுக்கு 1,500 ரூபாய் வீதம், அவர்களுக்கும் 4 மாதங்களுக்கு, 5,000 ரூபாய் வழங்குவதற்கும் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கிடையில், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட இரண்டு சங்கங்கள், 16-ம் தேதியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்கள்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்ற பொழுதே, நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று சொல்வது, அரசிற்கு எந்தவிதத்திலாவது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு உள்நோக்கத்தோடுதான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படமால் இருந்து, அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்கூட பரவாயில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அன்றையதினம் வந்த சங்கங்கள் அனைத்தும் வேலைப்பளுவினுடைய, ஒப்பந்தம் முடிந்ததற்குப் பின்னால்தான் இதைப் பேசமுடியும் என்பதற்காக சிறிது காலம் ஆகும் என்று சொன்னோம்.

மக்கள் வரிப்பணத்தில்....

நானாக இருந்தாலும் சரி, மின்சார வாரிய ஊழியர்களாக இருந்தாலும் சரி, மக்களுடைய வரிப்பணத்தில் தான் நாம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் அரசும் இருக்கின்றது. ஊழியர்களும் இருக்கின்றார்கள். மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துவதற்காக அரசும் இல்லை, ஊழியர்களும் இல்லை. அந்த சி.ஐ.டி.யூ சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்களுடைய கதவு திறந்தே இருக்கின்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமுகமாக , பேசி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார். அந்த வகையிலே நாங்கள் திறந்த மனதோடு இருக்கின்றோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.

வாபஸ் பெற வேண்டும்...

வேலைநிறுத்தம் என்பது மக்களுக்கு பல்வேறு வகையில் இடைஞ்சலை ஏற்படுத்துவது என்பது தான் அவர்களுடைய நோக்கமாக இருந்தால், மக்கள் அதை புரிந்து கொள்ளவேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்ற பொழுது, அந்த சி.ஐ.டி.யூ மட்டும் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். 12-ம் தேதி ஒருகட்ட பேச்சுவார்த்தை இருக்கின்றது. பேச்சுவார்த்தை முடியவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமாக முடித்துக் கொள்வதற்கு அரசு தயாராயிருக்கின்றது. ஆகையால், போட்டி மனப்பான்மையில்லாமல், மின்வாரியமும், தொழிலாளர்களும் எப்பொழுதும் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்காக பேச்சுவார்த்தையின் வாயிலாக இதனை பேசி முடித்துக் கொள்ளலாம். அதனால் வேலைநிறுத்த அறிவிப்பை அவர்கள் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து