கிருஷ்ணகிரியில் 3 பேரை கொன்ற காட்டு யானை பிடிபட்டது : 3 முறை மயக்க ஊசி போட்டு பிடித்தனர்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      தமிழகம்
elephan  2018 02-05

Source: provided

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரியின் சூளகிரி அருகே 3 பேரை தாக்கிக் கொன்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

கடந்த சில நாட்களாக சூளகிரி குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு 3 முறை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பிடிபட்ட யானையை லாரியில் ஏற்றி வனப்பகுதிக்குக் கொண்டு சென்றனர்.

கூட்டத்திலிருந்து தனியாகப் பிரிந்து வனப் பகுதியில் சுற்றித் திரியும் ஆண் யானை, கடந்த சில நாள்களாக சூளகிரி வனப் பகுதியில் வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வந்தது.


இந்த நிலையில், நேற்றுமுன்தினம் காலை சின்னாறு பகுதியில் பந்தரகுட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜப்பாவை (60) தாக்கிக் கொன்றது. இறந்த ராஜப்பாவின் உடலை மீட்க சென்றவரையும் தாக்கியது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சூளகிரி அருகே உள்ள தேவர்குட்டப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி முனிராஜ் (60) என்பவர் சின்னாறு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த யானையைப் பார்த்ததும் முனிராஜ் தப்பி ஓடினார்.

ஆனால், யானை அவரை துரத்திச் சென்று தும்பிக்கையால் தூக்கி வீசி, தந்தத்தால் குத்திக் கொன்றது. அப்போது, அங்கிருந்த பாறை மீது யானையின் தந்தம் மோதி உடைந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த எம்.எல்.ஏ. முருகனிடம் யானையை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர், பொதுமக்களைச் சமரசம் செய்த போலீஸார், உயிரிழந்த விவசாயியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தருமபுரி மண்டல வன பாதுகாவலர் உலகநாதன், கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், எஸ்.பி., மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து, மயக்க ஊசி போட்டு யானையைப் பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கர்நாடக மாநிலம், பன்னார்கட்டாவிலிருந்து டாக்டர் அருண் ஷா மற்றும் ஒசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வனப்பகுதிக்குள் சென்று துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

3 முறை மயக்க ஊசி செலுத்திய பிறகு, யானையை பிடித்த வனத்துறையினர், அதனை லாரியில் ஏற்றிச் சென்றனர். பின்னர் வனப்பகுதிக்குல் அந்த யானை விடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து