தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று மணல் குவாரிகளை மூட இடைக்காலத் தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      தமிழகம்
SUPREMECOURT 2017 10 30

புதுடெல்லி : தமிழ் நாட்டில் மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆற்று மணல் விற்பனையை குவாரிகள் அமைத்து தமிழக அரசே நடத்தி வருகிறது. ஆனால் முக்கிய ஆற்றுப் படுகைகளில் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதாகவும், விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் எனவே ஆற்றில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

தமிழக அரசு முடிவு


இதனையடுத்து மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆன்லைன் முன்பதிவு மூலம் மேற்கொள்ளும் புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மணல் விற்பனை செய்யும் குவாரிகள் எண்ணிக்கையை மேலும் 70 இடங்களில் உயர்த்தவும் தமிழக அரசு முடிவு செய்தது. மணல் தங்கு தடையின்றி, குறைந்த விலையில் கிடைப்பதற்கு அரசின் இந்த நடவடிக்கைகள் உறுதுணையாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் மணல் கிடைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் மணலுக்கு தட்டுப்பாடு நீடித்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்து விற்கலாம் என்று தனியாருக்கு அனுமதி கிடைத்தது.

படிப்படியாக மூட...

அதன் பேரில் ராமையா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு மணலை கொண்டு வந்தது. ஆனால் அதை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட்டின் மதுரை கிளை, “தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் படிப்படியாக மூட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

மேல் முறையீடு...

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், “தமிழ்நாட்டில் தற்போது மணல் விற்பனை ஆன்-லைன் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மணல் கடத்தல் குறைந்துள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், “வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் தொழிலக பயன்பாட்டுக்கான மணலாக உள்ளது. மாநில விதிக்குள் அது இல்லை. எனவே மணல் குவாரி மீதான தடையை விலக்க வேண்டும் என்றது. இதை ஏற்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இடைக்கால தடை...

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. தமிழக அரசு தனது மனுவில், “மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், “தமிழ் நாட்டில் மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம்” என்று அறிவித்தனர்.

மீண்டும் 20-ம் தேதி...

இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு மணல் குவாரிகள் மூலம் மணல் விற்பனை செய்யப்படுவது மீண்டும் பழையபடி தொடங்கி நடக்க உள்ளது. மணல் குவாரி மீதான ஐகோர்ட்டின் தடையை சுப்ரீம்கோர்ட்டு நீக்கியதை அறிந்ததும் மணல் குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் 20-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.
மணல் குவாரி தடையை நீக்கி சுப்ரீம்கோர்ட்டு அளித்த உத்தரவு குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

தமிழக மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் மலிவு விலையிலும் மணல் கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழகத்தில் இருக்கும் மணல் குவாரிகளை படிப்படியாக 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து போடப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் அந்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து சுப்ரீம கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இரண்டு நீதிபதிகளுடைய உத்தரவுக்கு இன்றைக்கு (நேற்று) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் முயற்சிக்கு...

இந்த தடை உத்தரவால் மணல் குவாரிகளை மூடுகின்ற நிலை ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு தங்கு தடையின்றி மணல் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த முதல்வரின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 2 வாரங்களில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வைத்து அனைவருக்கும் தங்கு தடையின்றி மணல் கிடைக்க செய்வதுதான் அரசின் கொள்கை. அதற்காக இனி வரும் காலங்களில் அந்த வழக்கை தீவிரப்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.

அரசின் கொள்கை ....

எம் சாண்டின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. அதற்காக எம்சாண்டை தயாரிக்கின்ற தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனவே எம்சாண்ட் தயாரிப்பதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது. திறக்கப்பட்டுள்ள மணல் குவாரிகள் அனைத்துமே சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்றுத்தான் திறக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் திறக்கப்பட உள்ள மணல் குவாரிகள் அனைத்துமே சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்றுத் தான் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து