முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து ஆய்வு: தமிழகத்தில் ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது - துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேட்டி

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழகத்தில் ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது என்றும்  தெரிவித்தார்.

துரிதமாக நடவடிக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

கடந்த பிப்ரவரி 2ம் தேதி இரவு 10 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னிதியின் முன்புறம் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைந்திருந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தகவல் தெரிந்த உடனேயே மாவட்ட ஆட்சியர், கோவில் தக்கார், இணை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர், வருவாய்த் துறையினர் என அனைவரும் விரைந்து செயல்பட்டனர். 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் துணையுடன் தீயணைப்பு நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

பழைய நிலைக்கே ...

தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் தீ 1 மணியளவில் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சேத மதிப்புகள் மதிப்பிடப்பட்டு வருகிறது. சேத மதிப்பு வந்த பிறகு 6 மாதத்திற்குள் ஆகம விதி மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு விபத்து நடந்த சுமார் 7 ஆயிரம் சதுர மீட்டர் பகுதி பழைய நிலைக்கே கொண்டு வரப்படும்.  தீ விபத்துக்குக் காரணம் என்ன என்று விசாரணை நடக்கிறது. இனிமேல் இது போன்ற தீ விபத்துகள் கோயில்களில் ஏற்படாமல் இருக்க குழு அமைத்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கோவில்கள் பாதுகாக்கப்படும்.

அகற்ற நடவடிக்கை....

கடைகள் தான் தீ விபத்துக்குக் காரணம் என்றால் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களை தனிப்பட்ட குழுக்களிடமோ,அமைப்பிடமோ ஒப்படைப்பது சரியானதாக இருக்காது, ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது. உலகப் புகழ் பெற்ற திருத்தலங்களில் தனியான தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்படும் என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்ததால் ஆட்சிக்கு ஆபத்து என்று ஜோதிடர்கள் சொல்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் எனக்கு ஜோசியம் பற்றி எதுவும் தெரியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து