திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் மாசித்திருவிழா பிப்.15ம் தேதி துவக்கம்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
dgl mariyaman 5 2 18 0

 

திண்டுக்கல், -திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா பிப்.15ம் தேதி பூத்த மலர் பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது.
திண்டுக்கல் நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான திருவிழா வரும் 15ம் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கலையரங்கில் பல வண்ண மலர்களால் பூ அலங்காரம் செய்யப்படும். மறுநாள் 16ம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வருவார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் மலர்களை காணிக்கையாக அம்மனுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். அந்த மலர்களைக் கொண்டு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும். பின்னர் அந்த பூக்களே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
மாசித்திருவிழா கொடியேற்றம் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. அன்று விஸ்வகர்மா மகாஜன சபையினரால் அம்மனுக்கு திருமாங்கல்யம் மற்றும் மஞ்சள் புடவை சாத்துப்படி செய்யப்படும். பின்னர் மார்க்கெட் தெரு குமரன் திருநகர் சாம்பன்குல மகாஜன சபையினரால் கொண்டு வரப்படும் பாலக்கொம்பு கோவில் முன்பு ஊன்றப்பட்டு கொடியேற்றம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொடிமரத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபடத் தொடங்குவர். மேலும் அம்மனுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்த உள்ள பக்தர்கள் தங்கள் கைகளில் காப்புக்கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள். மேலும் தினந்தோறும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், முளைப்பாரி சுமந்து வந்தும் வழிபாடு நடத்துவார்கள். அக்னி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்தலும் நடைபெறும். மேலும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைறுகிறது.
தினந்தோறும் பல்வேறு மண்டகப்படிதாரர் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மின்தேரில் வீதியுலா நடைபெறும். மார்ச் 1ம் தேதி அங்குவிலாஸ் மண்டகப்படியும், 2ம் தேதி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்றிரவு அங்கிங்கு இசைநிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 6ம் தேதி தெப்ப உற்சவத்துடன் மாசித்திருவிழா நிறைவு பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து