ஈ.வி.கே.எஸ் பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      தமிழகம்
Sengottaiyan 2017 9 2

ஈரோடு: கோபியில் நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் எங்கெல்லாம் காலி பணியிடங்கள் உள்ளதோ அங்கு எல்லாம் காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
- அமைச்சர் செங்கோட்டையன்

கடந்த வாரம் ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசும்போது பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விமர்சித்து பேசினார்.

அவர் பேசியபோது, 'இப்பகுதியில் இருந்து தான் ஒருவர் கல்வித்துறை அமைச்சர் ஆக இருக்கிறார். அவரிடம் எதாவது கேள்வி கேட்டால் தான் அரசியல் பேசமாட்டேன் என்பார். அதற்குக் காரணம் அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது' என்று காட்டமாக விமர்சித்தார். இந்நிலையில் நேற்று கோபியில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது அவரிடம் இளங்கோவனின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், அவர் பேசிய பேச்சுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது. அப்படி அவரது பேச்சுக்கு நான் கருத்து கூறிக்கொண்டு இருந்தால் நான் வகிக்கும் கல்வித்துறையே மங்கி போய் விடும் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் எங்கெல்லாம் காலி பணியிடங்கள் உள்ளதோ அங்கு எல்லாம் காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து