ஆந்திராவுக்கு சிறப்பு வசதிகள் கேட்டு பார்லி.யில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் அமளி

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      இந்தியா
indian parliament(N)

புதுடெல்லி : ஆந்திராவுக்கு சிறப்பு வசதிகள் கேட்டு பாராளுமன்ற மக்களவையில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கடும் அமளி ஈடுபட்டனர். இதேபோல், மாநிலங்களவையில் திரிணாமுல் கட்சியைச்சேர்ந்த எம்பிக்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்  தொடரின் முதல் அமர்வு கடந்த 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலை 11 மணிக்கு மக்களவையில் கூடியதும், உலகக் கோப்பை வென்ற இந்திய ஜூனியர் அணிக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்னர்  கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது ஆயுதப்படைசிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆகிர் பதில் அளித்தார்.


சிறப்பு அந்தஸ்து...

அப்போது, காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்தும் அத்துமீறிய தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். பா.ஜ.க. கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆந்திராவுக்கு சிறப்பு வசதிகள் கேட்டு முழக்கங்கள் எழுப்பினர். உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் நடைபெற்றது.

நாள் முழுவதும்...

உணவு இடைவேளைக்கு பின்னர் அவை கூடியபோது, தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அப்போது, பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், பிரதமர் மோடி ஆந்திராவின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தி வருவதாக கூறினார். ஆனால், இதனை எற்றுக்கொள்ளாத எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.

ஒத்திவைப்பு தீர்மானம்

இதேபோல் மாநிலங்களவை கூடியதும், திரிணாமுல் காங்கிரஸ், அகாலி தளம், தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள்  ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து பிரச்சினைகளை முன்வைக்க முயன்றனர். ஆனால் அந்த தீர்மானங்களை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். இதனால் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத்தில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து