கலையருவி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிருஷ்ண மஹாலில் நடைபெற்ற தமிழக பள்ளிக் கலைத்திருவிழா (கலையருவி) நிகழ்ச்சியில் மாவட்ட அளவில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு   கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்    பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

பாராட்டு சான்றிதழ்கள்

இவ்விழாவில் கலெக்டர்  பாராட்டி பேசியதாவது:-தமிழகம் தொன்றுதொட்டு கலைகளைப் போற்றி வந்ததனையும், அவற்றில் சிறந்து விளங்கியதனையும், தமிழ் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். தமிழ்மொழியையே இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாக்கிப் போற்றியவர்கள் தமிழ் மக்கள். தமிழக மக்களின் வழக்கில் இருந்த பல கலை வடிவங்கள் காலப்போக்கில் நலிந்தும் மறைந்தும் போகும் நிலைiiயை மாற்றிப் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு கலைவிழா தொடர்பான போட்டிகளை பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது மேலும்  ஒரு மாணவனின் மேம்பாடு என்பது கல்விசார் நிலையில் மட்டுமல்லாது கலை, கலாச்சாரம், விளையாட்டு எனப் பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகளிலும் அமைய வேண்டும் என்பதனைக் கருத்திற் கொண்டும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை - ‘ தமிழகப் பள்ளிக் கலைத் திருவிழா” என்னும் திட்டத்தினை இந்தக் கல்வியாண்டான  2017 - 18 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன் வந்திருக்கிறது. தமிழகப் பள்ளிக் கலைத் திருவிழா,  நூற்றுக்கும் மேற்பட்ட கலை வடிவங்களில்  மொழியாற்றல், பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மீகம், கலாச்சாரம்,  கிராமியம், நாட்டுப்புறம்  ஆகிய பல்வேறு பிரிவுகளில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள செல்கின்ற 352 மாணவ, மாணவிகளையும், ‘ஏ” தரம் பெற்ற 215 மாணவ, மாணவிகளையும் நான் மனமாறப் பாராட்டுகிறேன். மேலும், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு, பல பரிசுகள் பெற்று நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என  வாழ்த்துகிறேன். இவ்வாறு கலெக்டர்  பேசினார்.இந்நிகழ்ச்சியின் முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  எஸ்.பாலா, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (நெல்லை) பி.நடராஜன் மாவட்ட கல்வி அலுவலர் டி.ஆறுமுகம், கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள்  மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து