ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண ராஜீவ் காந்தியும், பூட்டோவும் முயன்றனர்: பாக். முன்னாள் அதிபர் சர்தாரி தகவல்

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      உலகம்
Pakistan-former-president-zardari 2018 02 07

லாகூர், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ராஜீவ் காந்தியும் பெனாசீர் பூட்டோவும் தயராக இருந்தனர் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையில் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும், மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர்பூட்டோவும் முயற்சி செய்தனர் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

விவாதம்...


பாகிஸ்தானின் லாகூர் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற காஷ்மீர் தினப் பேரணியில் கலந்து கொண்ட சர்தாரி, இதுதொடர்பாக பேசியதாவது: கடந்த 1990-ஆம் ஆண்டில் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக ராஜீவ் காந்தியும், பெனாசீர் பூட்டோவும் விவாதித்தனர். இந்த விவகாரத்தில் சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். அதற்கு அடுத்த ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் ராஜீவ் காந்தி வெற்றி பெற்றிருந்தால் அந்த நடவடிக்கையை முன்னெடுத்திருப்பார்.

முஷாரப்...

ஆனால், துரதிருஷ்டவசமாக தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக முஷாரபின் ஆட்சிக் காலத்திலும் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பான செயல் திட்டமொன்றை முஷாரப் கொண்டுவந்தார். ஆனால், அதற்கு பிற தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.  இதனால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

நவாஸ்...

நவாஸ் ஷெரீபை எடுத்துக் கொண்டால், அவர் இந்தியப் பிரதமர் மோடியுடன் நல்ல நட்புறவுடனேயே இருந்து வந்தார். ஆனால், அவர் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் முழு அக்கறை செலுத்தி செயல்படுவது பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மட்டும்தான்” இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து