மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிடுமா?

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      உலகம்
India intervene in Maldives issues 2018 02 07

மாலி, மாலத்தீவு அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கவனித்து வரும் இந்தியா தேவைப்படும் பட்சத்தில் மாலத்தீவுக்கு செல்லும் வகையில் தனது கடற்படையையும், விமானப்படையையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை திடீரென அந்த நாட்டு அதிபர் யாமீன் அப்துல் கயூம் அவசர நிலையை பிரகடனம் செய்தார். 15 நாட்களுக்கு இந்த அவசர நிலை அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் அதிபர் யாமீன் அப்துல் கயூம், விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஆனால் அவரது ஆசைக்கு தடைபோடும் வகையில் மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சில அதிரடி உத்தரவுகளை வெளியிட்டனர்.

மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு மாலத்தீவு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அப்துல்லா சயீது அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் 2 நீதிபதிகளும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக கூறி இந்த நடவடிக்கைகளை அதிபர் மேற்கொண்டார். நீதிபதிகள் கைது செய்யப்பட்டதற்கு மாலத்தீவு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. தலைநகரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காலை அதிபர் யாமீன் அப்துல் கயூம் மாலத் தீவு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

மாலத்தீவில் அதிபர் யாமீனின் செயல்பாடுகள் அத்துமீறி செல்வதால், உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே மாலத்தீவு அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவில் இருந்து மாலத்தீவு சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் சுமார் 1 மணி நேரத்துக்குள் மாலத்தீவுக்கு செல்லும் வகையில் இந்தியா தனது கடற்படையையும், விமானப்படையையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் பல்வேறு இடங்களில் இந்திய கடற்படை போர் கப்பல்கள் முகாமிட்டுள்ளன. மேற்கு பிராந்திய கடல் பகுதியில் எப்போதும் இந்திய கடற்படையின் 2 கப்பல் பிரிவு போர் கப்பல்கள் ரோந்துப் பணியில் இருக்கும். தேவைக்கு ஏற்ப அந்த போர் கப்பல்களை மாலத்தீவுக்கு 1 மணி நேரத்துக்குள் திருப்பி விட முடியும். அதற்கு ஏற்ப தயாராக இருக்கும்படி அந்த போர் கப்பல் பிரிவு உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-30 ஜெ “சூப்பர் ஹெர்குலஸ்”, சி-17 குளோப் மாஸ்டர் ரக விமானங்களும் மாலத்தீவுக்கு பாய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்கள் மூலம் ஒரே நேரத்தில் அதிக எடை யுள்ள போர் ஆயுத தளவாடங்களையும் அதிக வீரர்களையும் கொண்டு செல்ல முடியும்.

இதில் சி.17 ரக போர் விமானம் 70 டன் எடையுள்ள போர் கருவிகளை ஒரே மூச்சில் 4200 கி.மீ. தூரத்துக்கு கூட எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. இந்த ரக விமானங்களில் ஆயுதங்கள் ஏற்றபட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவ தளபதியிடம் இருந்து உத்தரவு வந்த அடுத்த 2-வது நிமிடம் மாலத்தீவுக்கு புறப்படும் வகையில் இந்த ரக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படை வீரர்களும் மாலத்தீவுக்கு செல்ல தயார்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று ராணுவ கமாண்டோ படை பிரிவு ஒன்று டெல்லியில் இருந்து தென்னிந்திய பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த கமாண்டோ படை வீரர்களும் களத்தில் குதிப்பார்கள். கொச்சி, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை பிரிவுகள் முழு அளவில் உஷாராக வைக்கப்பட்டுள்ளன. ராடார் கருவிகள் கொண்ட விமானப் படையும் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் போர் கப்பல்களும், விமானப்படைகளும் முழு அளவில் தயார் நிலையில் உள்ளதால் மாலத்தீவு பிரச்சினையில் இந்தியா உடனே அதிரடியாக தலையிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் மத்திய அரசு உயர் அதிகாரிகள் யாரும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து