தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      தேனி
theniJallikattu advisory meeting  7 2 18

  தேனி-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, பிறதுறை அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர்களுடனான ஆலோசனைக்கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவிக்கையில்,
தமிழக அரசின் உத்தரவின்படி, அய்யம்பட்டியில் 11.02.2018 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர்  லைவராகவும், மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் செயலராகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை, இணை இயக்குநர் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப்பணிகள் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவும், கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர் உத்தமபாளையம், காவல் துணை கண்காணிப்பாளர் போடிநாயக்கனூர், உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஆகியோர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
   ஜல்லிக்கட்டு நடைபெறும் தினத்தன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்குள் நடத்திடவும், கால்நடை பராமரிப்புத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் ஒப்புதல் அளிக்கும் காளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்பினர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உடற்திறன் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களிடம் சான்று பெற வேண்டும். போதை மருந்துகள் மற்றும் வெறியூட்டும் பொருட்கள் எவ்வடிவத்திலும் தரக்கூடாது. இதனை கால்நடை மருத்துவர்கள் நிக்கோட்டின் சோதனை, கோகைன் சோதனை மற்றும் இதர சோதனைகள் மூலம் உறுதி செய்திட வேண்டும். அரங்கிற்கு வருவதற்கு முன்னதாக காளைகளுக்கு 20 நிமிடம் ஓய்வு அளித்திட வேண்டும். ஒவ்வொரு காளைகளுக்கு குறைந்த பட்சம் 60 அடி இடம் ஓதுக்கீடு செய்திட வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு போதிய உணவு, தண்ணீர்  வசதி அளித்து அவை இயல்பான உடலியல் செயல்பாடுகளை மேற்கொள்ள அனுதிக்கப்பட வேண்டும்.
 ஜல்லிக்கட்டு அரங்கு குறைந்த பட்சம் 50 சதுர மீட்டர் பரப்பளவில் அமைத்திட வேண்டும். காளைகள் அரங்கிற்குள் நுழையும் போது அவைகளின் எதிரே நிற்க பங்கேற்பாளர்களை அனுமதிக்க கூடாது. மேலும், காளைகள் வெளியேறும் வழியைத் தடுக்க கூடாது. காளைகள் அவற்றின் திமிலைப்பற்றி அணைந்து 15 மீட்டர் தூரம் செல்ல அல்லது 30 விநாடிகள் செல்ல அல்லது காளைகளின் 3 துள்ளலுக்கான நேரம் மட்டுமெ இருக்க மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கபடுவர். காளைகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு காயம் ஏற்படா வண்ணம் 15 மீட்டர் தூரத்திற்கு அரங்கில் தென்னை நார் பரப்பப்பட்டிருக்க வேண்டும். இப்பகுதிகளில் கண்காணப்பு கோமிராக்கள் மூலம் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்திட வேண்டும். ஜல்லிக்கட்டு அமைப்பினர் பார்வையாளர் மாடத்தினை உறுதி தன்மையுடன் அமைத்து பொதுப்பணித்துறையினரிடமிருந்து பாதுகாப்புச் உறுதிச் சான்று பெற்றிட வேண்டும்.
 ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பதிவு செய்யப்பட்ட வீரர்களை அடையாளப்படுத்தி காட்டுவதற்காக ஒரே மாதிரியான பிரத்தியேக உடைகளை வழங்கிட வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அரங்கிற்குள் நுழையும் முன் முழு மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகள் காயமுற்றால் உடனடியாக சிகிச்சை அளித்திட ஏதுவாக மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், கூடுதல் அவசர ஊர்தி போன்ற மருத்துவ வசதிகள் செய்திட வேண்டும். உள்ளாட்சித்துறையினர் குடிநீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளையும், தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு வாகனத்தினை தயார் நிலையில் வைத்திட வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
   இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ.பாஸ்கரன்   ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

 


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து