திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
dgl jallikkatu 7 2 18

திண்டுக்கல், -  திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் அடுத்துள்ள புகையிலைப்பட்டியில் புனித செபஸ்தியார், சந்தியாகப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற 400 காளைகளும், 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க பெயர்களை பதிவு செய்திருந்தனர். போட்டிகளை தாசில்தார் கற்பகம் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து காளைகள் திறக்கப்பட்டதும் வீரர்கள் போட்டி போட்டு அதனை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்களும், அண்டா, பீரோ, சைக்கிள், ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பவுல்ராஜ்(30) என்பவர் காளையை அடக்க முயன்ற போது மாடு முட்டித் தள்ளியதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவருக்கு அதே இடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் காளையை அடக்க முயன்றவர்களும், வேடிக்கை பார்த்தவர்களும் என 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியைக் காண திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து