தீ விபத்து சம்பவம் எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து கடைகளையும் அகற்ற உத்தரவு

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      தமிழகம்
meenakshi tempie fire echo 2018 1 7

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள அனைத்து கடைகளையும் அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக கோவில் இணை ஆணையர் நடராஜன் நேற்று தெரிவித்துள்ளார். மேலும், இன்று காலை 11 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரசித்தி கோவில்...

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 நுழைவு வாயில்கள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வதால் கோவில் பிரகாரங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்கு புராதன சிலைகள், வளையல்கள், பொம்மைகள், சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் கடைகளும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளன.


கிழக்கு கோபுர பகுதியில்...

இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர பகுதியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் அருகே அமைக்கப்பட்டிருந்த வியாபார கடைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. இதனால் வீரவசந்தராயர் மண்டபம் பகுதியில் இருந்த தூண்கள் பலத்த சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீடியோ பதிவு செய்த தேசிய பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் நடராஜனிடமும் விசாரணை நடத்தினார்கள்.

துணை முதல்வர் ஆய்வு...

இதற்கிடையில் தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வந்து பார்வையிட்டார். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அவர் ஆய்வு செய்தார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாதிப்பு இல்லை...

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீர வசந்தராயர் மண்டபத்தில் பிளவுபட்டு தொங்கிக் கொண்டிருந்த மேற்கூரை கற்களில் பசுபதீஸ்வரர் சன்னதிக்கு கிழக்கு பக்கம் நான்கு கற்கள் கீழே விழுந்துள்ளது. இதனால் அருகில் உள்ள பசுபதீஸ்வரர் சன்னதிக்கோ அதன் மேற்கூரையிலோ எந்தவித பாதிப்பும் இல்லை என்று கோவில் கண்காணிப்பாளர் கம்சன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கோவிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த வியாபார கடைகள்தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலைக்குள்...

எனவே மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றும் படி கோவில் இணை ஆணையர் நடராஜன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 11 மணிக்குள் கடை உரிமையாளர்கள் தங்களது பொருட்களை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுநல மனு...

முன்னதாக, குமரியைச் சேர்ந்த வக்கீல் அபுல்கலாம் ஆசாத்சுல்தான், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பராம்பரியமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த தீ விபத்து பக்தர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நடந்த தீ விபத்துக்கு குளிர்சாதன வசதி, மின் இணைப்புகள் தான் காரணம். மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் உள்பட சில கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. கோவில்களின் உள்ளே இருக்கும் கடைகளில் ஏற்பட்ட மின்கசிவால் நடந்த விபத்துகள் ஏராளம். எனவே கலாசாரத்தின் அடையாளங்களாக திகழும் கோவில்களின் பழமையை பாதுகாக்கவும், அவற்றின் உள்கட்டமைப்புகளில் மாற்றம் செய்வதைத் தடுக்கவும், கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

12 பேர் கமிட்டி ....

இந்த வழக்கு நீதிபதிகள்  சத்தியநாராயணன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ  விபத்து குறித்து விசாரணை நடத்த 12 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள கடைகள் அனைத்தும் தற்போது  மூடப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் உள்ள பூக்கடைகளை தவிர பிற கடைகளையும், புதுமண்டபம் பகுதியில் உள்ள 300 கடைகளையும் அகற்ற  நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். வழக்கு விசாரணை வருகிற 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினர்...

இந்நிலையில், டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்குமார்பாண்டே தலைமையில், 6 பேர் செவ்வாய்கிழமை அன்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்து நடந்த இடத்திற்கு சென்று அந்த பகுதி முழுவதையும் பார்வையிட்டு படம் எடுத்துக்கொண்டனர்.  பின்னர் கோவில் இணை கமிஷனர் நடராஜனை சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், தீ விபத்து குறித்து விசாரித்தனர்.  நேற்றும் அவர்கள் கோவிலில் ஆய்வுப் பணியை தொடர உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து