மாலத்தீவில் திடீர் திருப்பம்: அரசியல் கைதிகளை விடுவித்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றது சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      உலகம்
Maldives president 2018 2 7

மாலே : மாலத்தீவு அரசியல் நெருக்கடியில் திடீர் திருப்பமாக அரசியல் கைதிகளை விடுவித்து பிறப்பித்த உத்தரவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் திரும்ப பெற்றுள்ளது.

அதிபர் ஏற்கவில்லை...

மாலத்தீவு நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் பரபரப்பான ஒரு தீர்ப்பை அளித்தது. அதில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அதிபர் யாமீன் அப்துல் கயூமின் மாலத்தீவு முன்னேற்ற கட்சியின் 12 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை அதிபர் யாமீன் அப்துல் கயூம் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. ஏனென்றால், இந்த 12 எம்.பி.க்களும் பாராளுமன்றம் வந்து, அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் சேருகிற போது, அரசு பெரும்பான்மை பலம் இழக்கும். இதனால், பாராளுமன்றம் காலவரையின்றி முடக்கப்பட்டு உள்ளது.


அவசர நிலை பிரகடனம்

இந்த நிலையில் அங்கு திடீரென அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.  இது 15 நாட்கள் அமலில் இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. அவசர நிலை பிரகடனத்தையடுத்து  அங்கு இருந்த தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அந்த நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியும், எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான மாமூன் அப்துல் கயூம், பாதுகாப்பு படையினரால் வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்படும் காட்சியும் வெளியானது. அதிபர் யாமீன் அப்துல் கயூமின் அடுத்தடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகளால் மாலத்தீவில் உச்ச கட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டது. மாலத்தீவு பிரச்சினையில், இந்தியா விரைந்து செயல்பட்டு தீர்வு காண உதவ வேண்டும் என்று முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் கோரிக்கை விடுத்து இருந்தார்.

திரும்ப பெற்றது...

இந்த நிலையில், மாலத்தீவு  அரசியல் நெருக்கடியில் திடீர் திருப்பமாக, 9 அரசியல் தலைவர்களை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 3 பேர் மறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் மூலம், மாலத்தீவில் ஏற்பட்ட அதிகார மோதலில் அதிபர் யாமீன், ஆரம்ப கட்ட வெற்றியை பெற்றதாக பரவலாக பேசப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை வரவேற்பதாக அதிபர் யாமீன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இருப்பினும், சீனா ஆதரவுடன் யாமீன் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக  மாலத்தீவு எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 1988 -ம் ஆண்டு மாலத்தீவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி கவிழ்ப்புக்கு  முயற்சிக்கப்பட்ட போது,  அந்நாட்டுக்கு ராணுவத்தை அனுப்பிய இந்தியா, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து