எங்கள் அணிக்கு எதிராக சதம் அடிக்க முடியுமா? கோலிக்கு பாக். பயிற்சியாளர் சவால்

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      விளையாட்டு
Mickey Arthur 2018 2 7

இஸ்லமாபாத் : தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலியால் சதம் அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

சதம் அடிக்க முடியாது 

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி, தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் 33 சதங்கள் அடித்து உள்ளார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளின் ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளார். இந்த நிலையில், விராட் கோலிக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், “ தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு எதிராக  விராட் கோலியால் சதம் அடிக்க  முடியாது என்று தெரிவித்துள்ளார். 

மிகக் கடினமாகும்...

பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தார் கூறியிருப்பதாவது:-

“இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகச் சிறந்த வீரர், பேட்ஸ்மன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அனைத்து அணிகளுக்கு எதிராகவும்  சதம் அடித்து இருக்கிறேன் என விராட் கோலி பெருமை கொள்ளலாம். ஆனால், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரால் சதம் அடித்துவிட முடியாது. எங்கள் அணிக்கு எதிராக கோலியால் சதம் அடிப்பது என்பது மிக மிகக் கடினமாகும்.எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் கோலியை அவ்வளவு எளிதாக சதம் அடிக்க விட்டுவிடமாட்டார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உட்பட சர்வதேச ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட 9 சர்வதேச அணிகளுக்கு எதிராகவும் விராட் கோலி சதம் அடித்துள்ள போதிலும், பாகிஸ்தான் மண்ணில் இதுவரை விராட் கோலி விளையாடவில்லை.

விளையாடவில்லை

கடந்த 2005-06-ம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் தொடரில் பங்கேற்று 4-1 என்ற கணக்கில் வென்றது. அந்த தொடரில் ராகுல் டிராவிட்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் இரு அணிகளும் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை. அதேபோல், சாம்பியன்ஸ் கோப்பைக்கு பின் இன்னும் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து