சிறப்பு நிதி ஒதுக்காததைக் கண்டித்து ஆந்திராவில் பந்த்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      இந்தியா
Andhra Bandh 2018 02 08

விஜயவாடா, மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி வழங்காததைக் கண்டித்து நேற்று இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டத்தால் 11,500 அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு தாக்கல் செய்த 2018-19 வருவாய் ஆண்டிற்கான பட்ஜெட்டில் புதிய மாநிலமாக உருவான ஆந்திராவிற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட வில்லை எனவும், மேலும், போலாவரம் அணைக்கட்டு, கடப்பா இரும்புத் தொழிற்சாலை, விஜயவாடா, விசாகப்பட்டினம் மெட்ரோ ரயிலுக்கான நிதி, அமராவதிக்கான சிறப்பு நிதி, மாநிலப் பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி முதலான எதையும் அறிவிக்க வில்லை ஆகியவற்றைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இந்தப் போராட்டத்திற்கு, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜனசேனா, லோக் சத்தா உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்து முழு அடைப்பில் பங்கேற்றன.

முழு அடைப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. நேற்று  நடைபெற இருந்த இண்டர்மீடியட் ( பிளஸ் - 1, 2) செயல்முறை தேர்வுகள் வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. பந்த் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 11,500 அரசு பஸ்கள் டிப்போக்களிலேயே நள்ளிரவு முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயங்கவில்லை.


நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் இயங்கவில்லை. காய்கறி மார்க்கெட்டுகள், ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் ஆந்திராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
காலை முதலே இடதுசாரி கட்சியினர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார், காங்கிரஸ், ஜனசேனா கட்சியின் சாலைகளில் ஒன்று கூடி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் மத்திய அரசின் கொடும்பாவி எரிக்கப்பட்டன. பஸ், லாரி, ஆட்டோக்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடின. இதனால் முக்கிய சாலைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கபடி, வாலிபால், கிரிக்கெட், பூப்பந்து போன்றவை ஆடி நூதன முறையில் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தி, சாலைகளில் சமையல் செய்து ஆர்பாட்டம் செய்தனர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, நெல்லூர் மாவட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். விஜயவாடா, குண்டூர், திருப்பதி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்பாட்டக்காரர்களை நேற்று முன்தினம் இரவே போலீஸார் கைது செய்தனர்.

குண்டூரில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசக் கட்சியினர் அமைச்சர் அனந்தகுமார் தலைமையில், நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தெலுங்கு தேச கட்சி எம்பிக்களுக்கு ஆதரவாக கண்டன ஊர்வலம் நடத்தினர். பக்தர்களின் வசதிக்காக திருப்பதியிலிருந்து திருமலைக்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து