நாட்டிலேயே முதல்முறையாக, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டம் - அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      தமிழகம்
Sengottaiyan 2017 9 2

சென்னை : இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டுத்திட்டம் கொண்டு வரப்பட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதன்படி மாணவர்கள் விபத்து காரணமாக இறக்கும் நிலை ஏற்பட்டால் 48 மணிநேரத்தில் ரூ.1 லட்சம் உடனடியாக தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ஆலோசனை

பொதுத்தேர்வுகளை முறைகேடுகள் இல்லாமல் நடத்துவது குறித்தும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித்துறை இணை செயலாளர் சரவணவேல்ராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெகந்நாதன், அனைவருக்கும் கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் நந்தகுமார், பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர்கள் இளங்கோவன், ராமேஸ்வர முருகன், கருப்பசாமி, கண்ணப்பன், வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர்கள் கலந்துக் கொண்டனர்.


முதன்முறையாக...

இந்த கூட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார், அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம், பெரிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறு காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும். இந்த தொகை விபத்து நடந்த 48 மணி நேரத்தில் வழங்கப்படும். இதற்காக மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உரிய பயிற்சி...

அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஒழுங்கீனத்தை தடுத்து நிறுத்த இருதரப்பினருக்கும் உரிய பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு யோகாவும், நாள்தோறும் விளையாட்டு பயிற்சி போன்றவை அளிக்கப்படும். மாணவர்களிடையே ஒழுக்கத்தை நிலை நாட்டுவதற்கான நீதிபோதனைகள் அடங்கிய பாடத்திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. அவைகள் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

வரவேற்பு...

12 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றம் வந்திருக்கிறது. இது தொடர்பான கருத்துகளை 15 நாட்கள் தெரிவிக்க காலஅவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. சிறந்த கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் , கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 318 கடிதம் மூலம் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.

கல்வித்தரம்...

அனைத்து வகுப்புகளுக்கும் 3 ஆண்டு காலத்தில் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு இருந்தோம். வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அதற்கு பிறகு பிற அனைத்து வகுப்புகளுக்கு பாடத்திட்டம் கொண்டு வரப்படும். 2 ஆண்டுகளுக்குள் அதை செய்து முடிக்க அதிவேக முயற்சி எடுத்து வருகிறோம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் கல்வித்தரம் இந்த பாடத்திட்டத்தில் இருக்கும். இந்த பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு பயிற்சி அளிக்க இருக்கிறோம். இதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க முடியும்.

தேர்வு மையங்கள் ...

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதுவதற்கு 20 முதல் 25 கி.மீட்டர் தூரம் செல்லும் நிலை முன்பு இருந்தது. இப்போது அதனை மாற்றி 10 கி.மீட்டர் தூரத்திற்குள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் 10 கி.மீட்டர் தூரத்திற்கு மேல் சென்று தேர்வு எழுதக்கூடாது என்பதற்காக 100 மாணவர்கள் இருந்தாலே அங்கு ஒரு தேர்வு மையத்தை அமைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு தமிழகத்தில் 3,560 தேர்வு மையமும், புதுச்சேரியில் 48 தேர்வு மையமும் என 3,608 மையங்களில் திருநங்கைள் 5 பேர் உட்பட 10 லட்சத்து ஆயிரத்து 96 மாணவர்களும், பிளஸ் 1 தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 913 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்களும் எழுதுகின்றனர். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வ தேர்வுகளை எழுதுவதற்கு தமிழகத்தில் 2,756 தேர்வு மையங்களும் , புதுச்சேரியில் 38 தேர்வு மையங்களும் என 2,794 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் தேர்வு...

தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள 6,402 முதன்மை கண்காணிப்பாளர்களும், 937 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களும், 94,880 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் 8, 500 பறக்கும் படை அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். ஆண்டுக்காண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு என்ன காரணம் என்று பலர் கேட்கின்றனர். மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு இருக்கிறது. மக்கள் பெருக்கம் குறைய குறைய மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது.

கண்காணிப்பு...

தேர்வு மையங்களை சரியாக கண்காணிக்க வேண்டும். சிறிய தவறுகள் கூட நடந்து விடக்கூடாது. பொதுத் தேர்வின் போது சிறு தவறு கூட இல்லாதவகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் அடுத்த ஆண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் தற்பொழுது தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசுப் பள்ளிகளின் தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

ஸ்மார்ட் கார்டு...

தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம். அது வந்தால் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஆசிரியர்கள் எங்கு கூடுதலாக பணியில் இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள முடியும். நாங்கள் நடத்திய ஆய்வில் 4 ஆயிரத்து 842 ஆசிரியர்கள் தென்மாவட்டத்தில் கூடுதலாக பணியில் இருக்கின்றனர். ரூ.60 கோடியில் 3 ஆயிரம் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஒரு ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் துவக்கப்படும். மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டணமில்லா அழைப்பு உதவி மையம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து