முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்ட்ரல்-அரக்கோணத்திற்கு 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கம்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      சென்னை

கூட்ட நெரிசலை குறைக்க சென்ட்ரல்-அரக்கோணத்திற்கு 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் கூடுதலாக பயணம் செய்ய முடியும். சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் இடையே மின்சார ரெயில்களில் 9 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தன.

பயணிகள் கூட்டம்

 இந்த மார்க்கத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் மிகுந்த நெரிசலில் பயணம் செய்வதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. கூட்ட நெரிசலை குறைக்க அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி மற்றும் செயலாளர் ரகுநாதன் ஆகியோர் மின்சார ரெயில்களை 12 பெட்டிகள் கொண்ட தொடராக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை அளித்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ரெயில்வே உயர் அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக சென்னை-அரக்கோணம் இடையே உள்ள ரெயில் நிலையங்களில் 12 பெட்டிகள் நிற்க ஏதுவாக நடை மேடைகளை மாற்றி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது கூடுதல் பெட்டிகளை வரவழைக்கும் பணியிலும் சென்னை கோட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்தநிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆவடி-அரக்கோணம், அரக்கோணம்-சென்ட்ரல், சென்ட்ரல்-அரக்கோணம், அரக்கோணம்-ஆவடி இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயிலை அதிகாரிகள் இயக்கினர்.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து நேற்று முதல் ஒரு ரெயில் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. 12 பெட்டிகள் கொண்ட மின்சாரரெயில்கள் இயக்குவதன் மூலம் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கூடுதலாக பயணம் செய்ய முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து