ராமநாதபுரம் மாவட்டத்தில் 39ஆயிரத்து 906 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
rmd group 4 exam 9 2 18

ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப்-4 தேர்வினை 39 ஆயிரத்து 906 பேர் எழுதுகின்றனர்.
     ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் நாளை(11-ந் தேதி) நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் -  தொகுதி-4 தேர்விற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை 1, நிலஅளவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை 3) உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கான தகுதியான நபர்கள் தேர்வு செய்வதற்காக தொகுதி-4  தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற  11.02.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  மாவட்டத்தில் இத்தேர்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்த 39ஆயிரத்து 906 நபர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.  இத்தேர்வினை அமைதியான முறையில் நடத்திட ஏதுவாக மொத்தம் 134 இடங்களில் உள்ள 157 தேர்வு மையங்களில் தேவையான அளவு தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
 தேர்வின் போது முறைகேடுகள் ஏதும்  நடக்காமல் தடுத்திடும் வகையில் வருவாய் வட்டத்திற்கு ஒரு குழு வீதம் 8 பறக்கும் படை குழுக்களும், 37  நிறுத்தும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.  தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒளிப்பதிவு செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர தேர்வு எழுதும் நபர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட  அனைத்து அடிப்படை வசதிகளையும் அந்தந்த தேர்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
 தேர்வு நாளன்று தேர்வு எழுதும் நபர்கள் சிரமப்படாதவாறு போதிய அளவு பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் அந்தந்த தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், தேர்வு முடிந்தவுடன் மீண்டும் பாதுகாப்பாக மாவட்ட கருவூலத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.  இத்தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி பின்பற்றி அமைதியான முறையில் இத்தேர்வினை நடத்திட ஏதுவாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன் உள்பட அரசு அலுவலர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து