கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல்வர் பழனிசாமி குணமடைந்து பணிக்கு திரும்ப கவர்னர் வாழ்த்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். நலம் விசாரித்தார்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      தமிழகம்
GOVERNOR 2017 11 15

சென்னை: கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூரண குணமடைந்து விரைவில் பணியை தொடங்க கவர்னர் புரோகித் பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கண் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பூங்கொத்து அனுப்பி விரைவில் பணிக்கு திரும்ப வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை
சென்னை தியாகராய நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி முதல்வர் பழனிசாமி கண்புரை நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது சென்னை அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மகேஸ்வரி உடனிருந்தார். அன்றைய தினமே வீடு திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி ஓய்வில் உள்ளார்.

நல்வாழ்த்துகள்...
இது குறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கண் அறுவைச்சிகிச்சைக்கு பின்னர் நீங்கள் வெற்றிகரமாக வீடு திரும்பியிருப்பது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் விரைவாக குணமடைந்து பணிக்கு திரும்ப நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கவர்னர் அனுப்பிய கடிதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர்...
இதற்கிடையே கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல்வர் பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். அத்துடன் கண்ணின் நிலை குறித்தும், கண்ணின் நிலை குறித்தும் சிலவற்றை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து