ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி பார்லி.யில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் கடும் அமளி

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      இந்தியா
chandrababu naidu 2017 1 22

புதுடெல்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

பாராளுமன்ற பட்ஜெட்  கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த 29-ம் தேதி தொடங்கியது. ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் அனைத்து நாட்களிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவ்வப்போது அவை ஒத்திவைக்கப்பட்டது.

கூச்சல் - குழப்பம்...
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வின் கடைசி நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு கூடியது. நேற்றும் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.  இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை கூடியதும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், கேள்வி நேரம் துவங்குவதாக அறிவித்தார்.


உடனே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் அனைவரும் ஒன்று கூடி கோஷம் எழுப்ப துவங்கினர். இதனால், கோபம் அடைந்த சுமித்ரா மகாஜன், ஒவ்வொரு நாளும் இது போன்று நடக்கக் கூடாது எனக்  கூறினார். ஆனால், இதை ஏற்க மறுத்த எம்.பிக்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால், மக்களவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும்....
இதே கோரிக்கையை எழுப்பி மாநிலங்களவையிலும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ரேணுகா சவுத்ரியை பிரதமர் மோடி விமர்சித்தது குறித்தும் பிரச்சனை எழுப்பப்பட்டது. பாராளுமன்றத்தில் ரேணுகா குறித்து மோடி பேசிய வீடியோ பதிவை சமூக வலைத்தளத்தில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார். இதற்காக அவரை மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும்  என சமாஜ்வாடி உறுப்பினர் நரேஷ் அகர்வால், அவைத்தலைவரிடம் வலியுறுத்தினார்.  இதுபோன்ற காரணங்களால் மாநிலங்களவையும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

பூஜ்ஜிய நேரத்தை துவங்க வேண்டும் என்று அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறிய போதும் ஏற்க மறுத்த எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.  முன்னதாக, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வரையில், போராட்டம் நடைபெறும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.  பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து