முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ரவுடி பினுவின் கூட்டாளி உட்பட 4 ரவுடிகள் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ரவுடி பினுவின் கூட்டாளி உட்பட 4 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் கூண்டோடு பிடிக்க போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். மதுரையை பூர்வீமாக கொண்ட இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து விட்டார். இவர் புழல் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி ஆவார். ரவுடி பினு தொழிலில் நம்பர் ஒன்னாக இருந்த போது உடல்நிலை பாதிப்பு காரணமாக கொஞ்ச காலத்துக்கு தொழிலை மூட்டை கட்டி வைத்திருந்தார்.

இந்த நிலையில் சிறையில் உள்ள நாகேந்திரனின் அறிவுரையை கேட்டு  நம்பர் ஒன் இடத்துக்கு ராதாகிருஷ்ணன் வந்து விட்டார். இவரை கொல்ல திட்டம் தீட்டவே பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் நடந்த பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது கூட்டாளிகள் திரண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ரகசிய தகவல் அறிந்த போலீஸார் ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது பினு, விக்கி, கனகு ஆகியோர் தப்பி சென்று விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3 ரவுடிகள் கைது

இந்த நிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த ஸ்கெட்ச் அலாவுதீன், குட்டியப்பன், அப்பன்ராஜ் ஆகிய 3 ரவுடிகளை அண்ணாநகர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூவர் மீதும் கொலை உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மூவரும் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூளைமேட்டில் வினோத் கைது

இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் பதுங்கியிருந்த பினுவின் கூட்டாளி வினோத்தையும் போலீஸார் கைது செய்தனர். அவனிடம் ரவுடி பினு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் பட்டுக்கோட்டையில் பதுங்கியிருந்த முகேஷ் (வயது 25) என்ற ரவுடியை பட்டுக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சூளைமேடு போலீசார் முகேஷிடம் விசாரணை நடத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே மாதவன் கைது

ஏற்கனவே பினுவின் நண்பன் மாதவனும் கரூரில் கைது செய்யப்பட்டுள்ளான். ரவுடி பினு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். அதை தொடர்ந்து போலீசின் பார்வையில் இருந்து தப்பிக்க பினுவிற்கு கரூரில் மாதவன் உதவியுள்ளார். பினுவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு புறப்பட்டு வந்த போதுதான் போலீசார் சுற்றிவளைத்துள்ளனர். அப்போது பினுவுடன் மாதவனும் தப்பி விட்டார்.  தலைமறைவான மாதவன் கரூரில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து