தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்களை முற்றிலும் தடுக்க சட்டத்திருத்தம் தேவை : சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      இந்தியா
election-comission 2017 11 01

Source: provided

புது டெல்லி :  தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்களை முற்றிலும் தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் திருத்தம் கொண்டு வர அறிவுறுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அரசியல் கட்சி தொடங்குவதற்கு மற்றும் கட்சியின் உயர்பதவியை வகிக்க தடை கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது.

அதில், குற்ற வழக்கில் தண்டனை பெற்றால் மட்டுமே, ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு, தற்போதைய சட்டம் உள்ளது. தேர்தலில் குற்றப் பின்னணி நபர்களை முற்றிலும் தடுப்பதற்கு, கொடிய குற்றங்களின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இருந்தாலே, சம்மந்தப்பட்ட நபரை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் வகையில், சட்டத்திருத்தம் தேவை என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் ஆதாயத்திற்காக வேண்டுமென்றே பழிவாங்கப்படும் நபர்கள், இதன்மூலம் பாதிக்கப்படுவதை தவிர்க்க, தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே, வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா என்பதையும் கவனத்தில் கொள்ளும் வகையில், விதிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரும் வகையில், சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்த வேண்டும் எனவும், அரசியல் கட்சிகளை பதிவு செய்ய மட்டுமே தங்களுக்கு அதிகாரம் உள்ளது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி, கட்சியின் பதிவை ரத்து செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், அந்த அதிகாரம் தேவைப்படுகிறது என்றும் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகத்தை பின்பற்றுவது கட்டாய தேவையாக உள்ளதாகவும் அந்த மனுவில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து