மகாசிவராத்திரியையொட்டி நாளை மதுரை மீனாட்சி கோவிலில் விடிய விடிய பூஜை

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      ஆன்மிகம்
mahasivarathiri 2018 2 11

மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி உற்சவத்தையொட்டி நாளை இரவு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், ஆராதனைகள் விடிய விடிய நடைபெறுகிறது.

இதையொட்டி அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். எனவே பக்தர்களும், பொதுமக்களும் அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை நாளை மாலைக்குள் கோவிலின் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம்.

நாளை இரவு 10 மணி முதல் 10.40 மணி வரை அம்மன் சன்னதியிலும், இரவு 11 மணி முதல் 11.45 வரை சுவாமி சன்னதியிலும் முதல் கால பூஜை நடைபெறும். இரவு 11 மணி முதல் 11.40 வரை அம்மன் சன்னதியிலும், நள்ளிரவு 12 மணி முதல் 12.45 வரை சுவாமி சன்னதியிலும் 2-ம் கால பூஜைகள் நடைபெறும். நள்ளிரவு 12 மணி முதல் 12.40 வரை அம்மன் சன்னதியிலும், நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 1.45 மணி வரை சுவாமி சன்னதியிலும் 3-ம் கால பூஜைகள் நடைபெறும்.

நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை அம்மன் சன்னதியிலும், அதிகாலை 2 மணி முதல் 2.45 வரை சுவாமி சன்னதியிலும் 4-ம் கால பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை பூஜையும் அதை தொடர்ந்து நாளை மறுநாள் அதிகாலை திருவனந்தல் பூஜையும் நடைபெறும்.

மகாசிவராத்திரியையொட்டி நாளை இரவு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் இரவு முழுவதும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன் தெரிவித்தார்.
சிவராத்திரியை முன்னிட்டு இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் அன்று இரவு 4 கால சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெறுகிறது. எனவே பக்தர்களும், பொதுமக்களும் அபிஷேக பொருட்களை கோவிலில் வழங்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து