கலாசாரத்தை மதிக்காதவர்கள் விரட்டியடிக்கப்படுவர்: கோவா அமைச்சர் மனோகர் அஜ்காவ்ங்கர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      இந்தியா
Manohar-Ajgaonkar (Goa Minister) 2018 02 12

கோவா, கோவா கலாசாரத்தை மதிக்காத சுற்றுலாப் பயணிகள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்று அந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அஜ்காவ்ங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

கோவா மாநிலம், பனாஜியில் உணவு மற்றும் கலாசார திருவிழா தொடக்க நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அஜ்காவ்ங்கர் கலந்து கொண்டு, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

கோவாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கோவா மாநில கலாசாரத்துக்கும், கோவா மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் கோவாவில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில், நான் வேறு யாரும் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன். எனது பேச்சில் உறுதியாக இருப்பேன்.


கோவா மாநில கலாசாரம், கோவா உணர்வு ஆகியவற்றை நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது. போதைப் பொருட்களை விற்கும் சுற்றுலாப் பயணிகள், கோவாவுக்கு வரத் தேவையில்லை. அதேபோல், போதைப் பொருட்களை விற்கும் விடுதிகளும் கோவாவுக்கு தேவையில்லை என்றார் அவர்.

முன்னதாக, கோவா மாநில விவசாயத்துறை அமைச்சரான விஜய் சர்தேசாய் பேசியபோது, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை குப்பைகள் என்று விமர்சித்தார். அதேபோல், கோவா மாநிலத்துக்கு தகுதியான சுற்றுலாப் பயணிகள்தான் தேவை, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும், சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து