நிலுவை சம்பளம் வழங்ககோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயற்சி
புதுச்சேரி பாப்ஸ்கோ ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும், பிஎப், கிராஜுவிட்டி, எல்ஜசி, கூட்டுறவு கடன் ஆகியவற்றிக்கு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை அந்தந்த நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டக் குழு சார்பில் தட்டாஞ்சாவடி தலைமை அலுவலகம் முன்பு தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
முற்றுகை போராட்டம்
நேற்று 5-வது நாளாக போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட அங்கிருந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மாரியப்பன், சிவப்பிரகாசம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி வந்தது. ஆம்பூர் சாலையில் வந்தபோது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் தடுப்பை மீறி சட்டசபையை நோக்கி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் கைது ஆக மறுத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடு:பட்னர். இதனால் ஆம்பூர் சாலையில் நேற்று காலை சிறிது நேரம் திடீர் பரபரப்பு நிலவியது.