தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைத்தார் - முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் விழாவில் பங்கேற்பு

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      தமிழகம்
speaker open jayalalitha portrait 2018 2 12

சென்னை : தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் ப.தனபால் நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அலங்கரிப்பு...

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6 முறை பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அவருடைய படத்தை தமிழக சட்டசபை அரங்கில் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜெயலலிதா படத்தை சட்டமன்ற அரங்கில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இதையொட்டி தமிழக சட்டசபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத் திறப்பையொட்டி சட்டமன்ற வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வரவேற்ப்பு...

இந்த விழாவிற்கு சபாநாயகர், தனபால், மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஒன்றாக சபை்க்கு வந்தனர். அவர்களை அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அனைவரையும் வரவேற்று பேசினார். சட்டசபையில் அரங்கில் 11 வது திருவுருவப் படமாகமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு வண்ண உருவப்படத்தை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ப.தனபால் திறந்து வைத்தார்.

சபாநாயகர் பேச்சு...

அவரது உருவப்பட்டத்தை திறந்ததும் ஜெயலலிதாவை வரவேற்று தங்கத்தாரகையே வருக வருக என்ற பாடல் ஒலித்தது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அனைவரும் ஜெயலலிதா புகழ் வாழ்க என்று முழக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். முடிவில் சபாநாயகர் தனபால் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பேரவைத் தலைவர் பொறுப்பில் நடுநிலை தவறாது பணியாற்றியுள்ளேன் என மறைந்த முதலவர் ஜெயலலிதா அளித்துள்ள அந்தப் பாராட்டு ஒன்றையே என்  பேறாக, கிடைத்தற்கரிய வரமாக, என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பரிசாகக்  கருதி வாழ்ந்தேன். பேரவைத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டபோது,  யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து  மகிழ்ந்தேன்.

அசாதாரணமானவை...

அவரின் இரங்கல் தீர்மானத்தின்மீது பேசும் வாய்ப்பு கிடைத்தபோது, யாருக்கும்  கிடைக்கக்கூடாத வாய்ப்பைப் பெற்றமைக்காக வருந்தினேன். இன்றைக்கு  தாமரை  இலை தண்ணீர்போல மறைந்த முதல்வரின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகின்றேன். எனக்கென்று யாரும் கிடையாது. எனக்கு உறவுகள் இல்லை. எல்லாமும் நீங்கள்தான்" என்னும் சங்கல்பத்தோடு, நெருப்பை கிரீடமாய் நித்தம் நித்தம் சுமந்து, வெளிச்சத்தை வாழ்விக்க எண்ணெயாய், திரியாய் எரிந்த  தீபம் மறைந்த முதல்வர். ஏழையெளிய மக்களுடைய வறுமையைப் போக்குவதற்கு அவர் தீட்டிய திட்டங்கள் யாவும் அசாதாரணமானவை. 

கடவுளாகத் தெரியும்...

சந்தனமாய்க் கரைந்து, சங்கத் தமிழ் பூமிக்கு சாதனைகளைக்  குவித்து மறைந்துள்ளார். முதல்வர் மறைந்தாலும், கரிகாலன் கல்லணைக்கு காவிரி  ஓடி வந்து கைகுலுக்கும் போதெல்லாம், கம்பீரத் தாயின் முகம் கழனியெங்கும் பயிரோடும், காவிரி நீரோடும் கலந்தே சிரிக்கும். முல்லைப் பெரியாற்று அணை நிரம்பி, முழு அளவு தொடும்போது மூவேந்தர் ஓர் உருவாம் முத்தமிழ்த் தாயின் முகம் தென் மாவட்டம் எங்கும் தேனாக இனிக்கும். கள்ளிப்பால் கொடுமை கண்முன்னே நிழலாடும் போதெல்லாம் அதற்குக் கொள்ளிவைத்த கருணைத்  தாயின் முகம் கடவுளாகத் தெரியும். மடிக்கணினி, மிதிவண்டி, மாணவர்க்கு  சீருடை, காலணி, கல்வி உதவித் தொகை என கனிவோடு தந்த தாயை, ஈரிலையில்  வாழுகின்ற இன்னொரு கலைமகளென்று இவ்வுலகம் போற்றும். யாராலும்  மறக்க முடியாத தெய்வம், இன்று படமாய் மாறி, என்றென்றும் வழிகாட்டும்  பாடமாய் நிற்கும் தெய்வம் .அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்போது,  முதலமைச்சராக இருந்தாலும், ஓர் உறுப்பினர் என்ற முறையில், தான் ஆற்ற வேண்டிய கடமையை மிகச் சரியாக அவர்கள் ஆற்றினார்.

வழிநடத்திச் செல்பவர்...

அவர் இந்த அவையில் நடந்து கொண்டது, நமக்கெல்லாம் பாடம். சிறந்த   முதலமைச்சரை, மிக உயர்ந்த செயல்பாடுடைய  உறுப்பினரைப் பெற்றமைக்காக  இந்தப் பேரவை நிச்சயமாகப் பெருமை கொள்கிறது என்பதில் இருவேறு கருத்து  இருக்க முடியாது. அவரின் புகழ் என்றென்றும், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய  துணைக் கண்டம் மட்டுமல்ல, உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்கிற  நம்பிக்கையை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கே தெரியாமல்  உதவும் இதயத் துடிப்புகளாய் ஒவ்வொரு கணமும் நம்மைக் காத்து, உயிர்ப்பாக  வைத்திருப்பவர். நம்மை வழிநடத்திச் செல்பவர். இவ்வாறு பேசினார்.

தினகரன் ஆப்செண்ட்

இந்த விழாவில் ஆர்.கே.நகர் சுயேட்சை எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் பங்கேற்பதாக  அறிவித்திருந்தார். அவர் சட்டசபைக்கு வரவில்லை. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான  கலைச்செல்வன், ரத்தினசபாபதி, தோழமைக்கட்சி எம்.எல்.ஏ.க்களான நடிகர்  கருணாஸ், தனியரசு ஆகியோரும் வந்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர்கள்...

ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு விழாவை திமுக- காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன. எனவே அந்த வரிசையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், வைத்திலிங்கம், செம்மலை, சி.பொன்னையன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுக எம்.பிக்கள் நவநீத கிருஷ்ணன், அன்வர் ராஜா, எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக அமர வைக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர் மாடத்திலும் சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கை பக்கம் யாரும் போகவில்லை. எனவே அந்த இருக்கை காலியாக இருந்தது.

அதிகாரிகள் மாடத்தில் டி.ஜி.பி.ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர்,துணை முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரு்ககு பொன்னாடைகளும் நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. விழா முடிந்ததும் சட்டசபையில் திறக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் அதிமுக முக்கிய பிரமுகர்கள் மைத்ரேயன் மற்றும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.

அமைச்சர்கள் வரிசையில் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நடிகர் கருணாஸ் அதிமுக எம்பி எஸ் ஆர். பாலசுப்ரமணியன் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா வைகை செல்வன் ஆகியோர் அமைச்சர்களுக்கு அடுத்தப்படி ஆளுங்கட்சி வரிசையில் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தனர்.


ஜெயலலிதா திருவுருவ படம்

ஜெயலலிதாவின் உருவப் படம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமரும் பகுதியில் முதல்வர் இருக்கைக்கு பின்புறம், முதல் மற்றும் இரண்டாவது பிளாக் இடையில் உள்ள தூணில் பொருத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே உள்ள தலைவர்கள் திருவுருவப் படங்களை போல ஜெயலலிதா திருவுருவப் படமும் 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்டதாகவும் முழு உருவப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை  கவின் கலைக் கல்லூரியை சேர்ந்த ஓவியர் மதியழகன் வரைந்திருந்தார். ஜெயலலிதா உருவப் படத்தின் கீழ் அவர் பொதுக்கூட்டங்களிலும்  அறிக்கைகளிலும் அதிகம் பயன்படுத்தும் அமைதி, வளம், வளர்ச்சி என்ற  வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

அரங்கம் முழுவதும் ஆரவாரம்

விழாவின் போது இடையிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டன, 23.1.2016 அன்று தமிழக அரசின் இடைநிலை நிதிநிலை அறிக்கையின் போது ஜெயலலிதா பேசிய அவரது பேச்சு ஒலி பரப்பு செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதாவின் குரல் மீண்டும் ஒலித்ததை கேட்டதும் விழா அரங்கில் இருந்த அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

 

Kolamavu Kokila(CoCo) Movie Review | Nayanthara | Yohi babu | Anirudh | Nelson

World's ugliest pug!! See for yourself!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து