பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தும் மோடி: ராய்ச்சூரில் காங். தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      இந்தியா
rahul-gandhi 2017 9 10

ராய்ச்சூர்: பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார்  பிரதமர் மோடி என்று கர்நாடக மாநிலம்
ராய்ச்சூரில்  நடந்த  பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறினார்.

இதுகுறித்து கர்நாடகாவின் ராய்ச்சூரில்  நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி ஊழல் இல்லாத கர்நாடகாவை உருவாக்கப் போவதாக சொல்கிறார். ஆனால் கடந்த ஆட்சியில் ஊழல் புரிந்து சிறைக்கு போன எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்.

இதேபோல அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா 3 மாதங்களில் 80 கோடி சம்பாதித்து விட்டார். அவர் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதை பற்றி ஏன் மோடி பேச மறுக்கிறார்?


சீனா நாளொன்றுக்கு 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. ஆனால் மோடியின் அரசு நாளொன்றுக்கு 450 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு தருகிறது.

பாஜக ஆட்சியில் விவசாயிகளும், தொழிலாளர்களும், இளைஞர்களும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பணக்காரர்கள், தொழிலதிபர்கள், கார்ப்பரேட்டுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். பெரும் தொழிலதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்திருக்கிறார். ஆனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்தின்போது ராய்ச்சூரில் சாலையோரம் இருந்த பஜ்ஜி கடைக்கு திடீரென சென்ற ராகுல் காந்தி, சூடான பஜ்ஜி, பக்கோடா சாப்பிட்டார். அப்போது அவருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து