முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாட்களில் ஆன்லைன் மூலம் மொத்தம் 8,017 பத்திரங்கள் பதிவு: தமிழக அரசு விளக்க அறிக்கை

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, கடந்த 3 நாட்களில் ஆன்லைன் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 8.017 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

ஆன்லைன் மூலம் ஆவண பதிவிற்கு புதிய ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான மென்பொருள் ஸ்டார் 2.0 ஆனது 12.2.2018  அன்று தொடங்கி வைக்கப்பட்டது. 13.2.2018 முதல் ஆவணங்கள் புதிய மென்பொருளை பயன்படுத்தி பதிவு செய்யப்படுகிறது. இந்த புதிய மென்பொருளில் ஆவணங்களை பொதுமக்களே தயார் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தயார் செய்த ஆவணங்களை இணையதளம் மூலம் அனுப்பி சார்பதிவாளரிடம் முன்சரிபார்ப்பு செய்து கொள்ளலாம். அது மட்டுமன்றி ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் தயாரித்த ஆவணங்களை இணையதளம் மூலம் அனுப்பி முன் சரிபார்க்கும்  முறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 15-ம் தேதி முடிய 24,819 பயனாளிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்ட https://tnreginet.gov.in இணையதளத்தை பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் 48,422 வரைவு ஆவணங்களை தயாரித்து உள்ளனர். 15-ம் தேதி முடிய 13,557 ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சார்பதிவாளர்களுக்கு முன்சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் சார்பதிவாளரால் 11,680 ஆவணங்கள் முன்சரிபார்ப்பு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 7,875 ஆவணங்கள் பொதுமக்களால் அச்சுப்பிரதி எடுக்கப்பட்டு பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் சார்பதிவாளர்களால் பதிவு செய்யப்பட்டன. 

இந்த புதிய மென்பொருளில் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சென்னையில் 1,028 பத்திரங்களும், கடலூரில் 929, வேலூரில் 942, திருச்சியில் 950, தஞ்சையில் 504, சேலத்தில் 726, மதுரையில் 1,030, கோவையில் 988, திருநெல்வேலியில் 920 பத்திரங்கள் என கடந்த 3 நாட்களில் மொத்தம் 8,017 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இன்டெர்நெட் பிரௌசிங் சென்டர் நடத்துபவர்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஆவணம் உருவாக்கல் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இணையதளம் வழியாக சிறிது பயிற்சி உள்ளவர்கள் எளிதாக ஆவணத்தை தயாரிக்க இயலும். அனைத்து இன்டெர்நெட் பிரௌசிங் சென்டர்களும் ஆவணம் தயாரித்து வழங்குவதில் தங்களின் பங்களிப்பை பொதுமக்களுக்கு அளிக்கலாம். பொதுமக்கள் எளிதில் அவர்களை அணுகி குறைந்த செலவில் ஆவணம் விரைவில் தயாரித்து பயனடையலாம்.  இன்டெர்நெட் பிரௌசிங் சென்டர் நடத்துபவர்களுக்கு பயிற்சிகள் தேவைப்படின் அருகில் உள்ள மாவட்டப்பதிவாளருக்கு விண்ணப்பிக்கலாம். தங்கள் அருகில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை https://tnreginet.gov.in/ இணைய தளத்தில் முகப்பு பக்கத்தில் “உங்கள் அதிகார எல்லையை தெரிந்துகொள்ளுங்கள்” என்பதன் கீழ் உள்ள மாவட்டப்பதிவாளர் அலுவலகம் என்ற link-ஐ கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம். மேலும் மேற்குறிப்பிட்ட சேவைகளை கிராமபுற மக்களுக்கும் கணினி பயிற்சி இல்லாதவர்களுக்கும் எடுத்து செல்வதில் தங்களின் பங்களிப்பை அளிக்க பதிவுத்துறை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து