முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆத்தூர் அருகே பாறை ஓவியங்கள்: போடி கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்தனர்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

போடி, -     போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி மாணவர்கள், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பழமையான பெருங்கற்கால பாறை ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர்.
     தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வர் முனைவர் .மனோகரன் வழிகாட்டுதலின் பேரில் இக்கல்லூரியை சேர்ந்த வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சி.மாணிக்கராஜ் தலைமையிலான குழுவினர் தொல் பொருள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இக்குழுவை சேர்ந்த உதவி பேராசிரியர் மாணிக்கராஜ், தொல்லியல் ஆய்வாளர் எம்.கனகராஜ், மாணவர்கள் ராம்குமார், சௌந்தரபாண்டி, பிரகாஷ், ராஜேஸ் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உளள சித்தரேவு என்ற கிராமத்தின் மேற்கே அமைந்துள்ள மலைப்பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது இப்பகுதியில் குகை போன்ற இடங்கள் காணப்பட்டன. அவற்றில் பாறை ஓவியங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
     இதுகுறித்து உதவி பேராசிரியர் சி.மாணிக்கராஜ் கூறுகையில், சித்தரேவு ஊரின் மேற்கே தாண்டிக்குடி மலையின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள ஓவா மலை என்ற இடம் உள்ளது. இந்த மலை பகுதியில் பெருமாள் பொடவு என இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் குகை உள்ளது. இந்த குகையின் வெளிப்பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மனிதன் மற்றும் விலங்குகளின் உருவங்கள் வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.
     இவை பெருங்கற்காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம். இந்த ஓவியங்கள் மனிதர்கள் கைகளை உயர்த்தி நடனமாடுவது போன்றும், கையில் கம்பு போன்ற ஆயுதங்கள் ஏந்திய நிலையிலும், புலி பாய்வது போன்றும், அதற்கு முன்னாள் மான் ஒன்று ஓடுவது போன்றும் ஓவியங்கள் காணப்படுகிறது. இதேபோல் வேட்டைத் தலைவன் அல்லது இனக்குழு தலைவன் அல்லது கடவுள் போன்ற உருவத்தின் முன் மனிதர்கள் சிலர் நடனமாடுவது போன்றும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
     மனித உருவங்கள் தட்டையான அமைப்புடன் உள்ளது. ஒரு சில மனித உருவங்களின் முகம் பறவைகளின் முகத்தோற்றத்தை போல் காணப்படுகிறது. சில மனித உருவங்கள் குள்ளமாகவும் அவர்களின் தலைப்பகுதி வட்டமாகவும் வரையப்பட்டுள்ளது. புலியின் உடலில் கோடுகள் காணப்படுகிறது. இக்குகை ஓவியங்கள் கைகளால் வரையப்பட்டுள்ளன.
     மனிதன் இனக்குழுக்களாக வாழ்ந்த காலத்தில் வேட்டையாடுவதையும், விலங்குகள் வேட்டையாடுவதையும் தான் வசிக்கும் குகை பகுதியில் தனது உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஓவியங்களை வரைந்திருப்பது தெரிகிறது. இந்த ஓவியங்கள் கலை மற்றும் வீரத்தின் அடையாளமாக அமைந்துள்ளது.
     இந்த மலை பகுதியில் காணப்படும் குகை ஓவியங்கள் மூலம் இப்பகுதி வரலாற்று தொன்மையான இடமாக அறியமுடிகிறது. மேலும் இப்பகுதியில் ஏற்கனவே கி.பி.9 முதல் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு உரல் வட்டெழுத்துக்களுடன் கண்டறியப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு செய்தால் பல வரலாற்று தொன்மையான தடயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றார் உதவி பேராசிரியர் மாணிக்கராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து