முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் ஊழியருடன் துணை பிரதமர் பாலியல் உறவு: ஆஸ்திரேலிய ஆளும் கூட்டணியில் விரிசல்

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

சிட்னி: ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் முன்னாள் பெண் ஊழியருடன் பாலியல் உறவு வைத்துள்ள விவகாரம் தற்போது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. ஊழியர்களுடன் அமைச்சர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்ள பிரதமர் மால்கம் டர்ன்புல் தடை விதித்துள்ள நிலையில் பர்னபி அதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த பர்னபி ஜாய்ஸ் (வயது 50) துணைப் பிரதமராக பதவி வகித்து வருகிறார். தேசியக் கட்சித் தலைவரான அவர் அந்நாட்டின் வலிமையான அரசியல் தலைவர்களில் ஒருவர். ஊடக ஆலோசகராக பணியாற்றிய விக்கி காம்பியன் (வயது 33) என்ற பெண்ணுடன் பர்னபி ஜாய்ஸ்க்கு பாலியல் ரீதியாக தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

காம்பியனுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துணை பிரதமர் ஜோய்ஸ் வசித்து வருவதாகவும், அந்த வீட்டை, ஜாய்ஸின் வசதி படைத்த நண்பர் ஒருவர் வாங்கித் தந்ததாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி காம்பியனுக்கு தேசியக் கட்சியில் முக்கிய பதவியும் வழங்கப்பட்டது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் பெரிய அளவில் விமர்சித்து வந்தன.

மனைவி நடாலி (வயது 24) மற்றும் நான்கு பெண் குழந்தைகள் உள்ள துணைப் பிரதமர் ஜாய்ஸ் அமைச்சருக்கான அறநெறிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன.
இதையடுத்து, மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும், தனது முன்னாள் ஊழியர் காம்பியனுடன் பாலியல் உறவு இருப்பது உண்மை எனவும், விரைவில் காம்பியனுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும், கடந்த மாதம் ஜாய்ஸ் வெளிப்படையாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ததால் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், அமைச்சர்கள் ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தடை செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:

''தலைவர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். இது மக்களின் விருப்பம். அமைச்சர்கள், ஊழியருடன், பாலியல் ரீதியான தொடர்பு வைத்துக்கொள்வது, தவறான முன்னுதாரணம். திருமணம் ஆனவர், ஆகாதவர் என அனைவருக்கும் இது பொருந்தும்'' எனக் கூறினார்.

மேலும் அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய குழுவிற்கு ஜோய்ஸ்க்கு பதில் நிதியமைச்சர் மேத்யூஸ் செல்வார் எனவும் அறிவித்துள்ளர்.

பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவிப்புக்கு ஜாய்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''பிரதமரின் அறிவிப்பு தேவையற்றது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததாக ஆகி விடும். அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுக்கும்'' என அவர் கூறியுள்ளார்.

தங்களின் தேசியக் கட்சியின் உள்விவகாரத்தில் பிரதமர் தலையிடுவதாக ஜாய்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஆளும் கூட்டணிக்குள் பெரும் மோதல் வெடித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து