முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு பலவகைகளில் நெருக்கடி கொடுத்தனர் நான் இருந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார் தேனி கூட்டத்தில் சசிகலா குடும்பம் மீது ஓ.பி.எஸ். மறைமுக தாக்கு

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

தேனி: எனக்கு பலவகைகளில் பிரச்னை தர துவங்கினர். நான் இருந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார் என்று தேனியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குடும்பம் மீது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மறைமுகமாக தாக்கி பேசினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம்  தேனியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி சையதுகான் தலைமை தாங்கினார். இதில் ஆர்.பார்த்திபன் எம்.பி, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன்,  தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் ஒ.பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம்  சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்த நாளன்று என்னை பார்க்க வருவதை தொண்டர்கள் தவிர்த்து விட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பார். அதன்படி ஏழை எளியோருக்கு வேஷ்டி சேலை வழங்குதல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு பல்வேறு உதவிகள் செய்வது. அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது, அன்னதானம் வழங்குவது, அம்மா நீடுடி வாழ அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் பிரார்த்தனை செய்வது என்பது வழக்கம்.

தேனி மாவட்டத்தில் 2014 முதல் இயலாத நிலையில் உள்ள இதய நோயாளிகளுக்கு உதவும் வகையில் இதுவரை 164 பேருக்கு சொந்த செலவில் இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளேன். அனைவரும் தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். எம்.ஜி.ஆர் , தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். மேலும் நமது இயக்கத்தில் 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர்.
அவரது மறைவுக்கு பின் கட்சி சிதைந்து போகும் என்று எதிர்க்கட்சிகள் எண்ணியபோது நான் இருக்கிறேன் என்று நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 28 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து தாங்க முடியாத சோதனைகளை எல்லாம் கடந்து நமது கழகத்தை ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கோட்டையாக உருவாக்கினார். மேலும் 17 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். நமது இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 27 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்யும் அதிகாரத்தை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். தற்போது அம்மா  நம்மோடு இல்லை. புரட்சித்தலைவரும்,  அம்மாவும் என்ன நோக்கத்திற்காக இயக்கத்தை கட்டி காத்தனரோ அந்த நோக்கத்திற்காக தான் தர்மயுத்தம் தொடங்கி அதில் வெற்றி பெற்று இன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றிணைந்து கட்சியையும், ஆட்சியையும் பலப்படுத்தி லட்சியபயணத்தை தொடங்கியிருக்கின்றோம்.

என்னை அரசியலில் அறிமுகப்படுத்தியது நான்தான் என தினகரன் கூறி வருகிறார். நான் 1980ல் வார்டு பிரதிநிதியாக தொடங்கி பல்வேறு பதவிகளை வகித்து பின்னர் 1996ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நமது கழகத்திற்கு கடும் வீழ்ச்சி இருந்தபோதிலும் 104 நகராட்சிகளில் 8 நகர்மன்ற தலைவர்கள் மட்டுமே நாம் வென்றோம். அதில் நானும் அடங்கும். 1997ல் பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட தினகரன் அறிவிக்கப்பட்டு, அவர் பெரியகுளம் வரும் போது தொகுதி முழுவதும் படம் வரைந்து பேனர் வைத்த முதல் நபர் நான்தான். ஆனால் இதுவரை எதற்கும் அவரிடம் பணம் பெற்றதில்லை. உதவியும் கேட்டதில்லை. அந்த தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்தோம். 2004ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, என்னை திருமங்கலம் தொகுதியில் வேலை பார்க்க அனுப்பினார். தினகரன் தோற்றதும் அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவியை அம்மா வழங்கினார். 2007ல் தினகரனை நீ பாராளுமன்றத்திற்குள் நுழைய கூடாது. தேனி மாவட்டத்திலும் இருக்க கூடாது உடனடியாக கிளம்பி வா என்று உத்தரவிட்டார். அதன்படி அவரும் கிளம்பி விட்டார். பெங்களுர் நீதிமன்றத்தில் அம்மா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் என்னை அழைத்து உடனடியாக சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்க உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார். அதன்பின் நத்தம் விஸ்வநாதனை அழைத்து சட்டமன்ற தவைரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்ன போது யாரை என்று கேட்டவுடன் பன்னீர்செல்வம் தான் என அம்மா உடனடியாக சொன்னார். அங்கே இருந்தவர்கள் நம்மை கேட்காமலேயே அறிவிக்கிறாரே என்றும் எனக்கு பலவகைகளில் பிரச்சினை தர துவங்கினர். நான் இருந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார். அப்பிரச்சினைகளை எல்லாம் தாங்கி கொண்டு அம்மாவுக்கு விசுவாசமாக இருந்தேன். 

அம்மாவுக்கு எதிராக சதி செய்ததாக கூறி சசிகலா, தினகரன் உட்பட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 16 பேரை நீக்கினார். சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சேர்த்துக் கொண்டார். மற்றவர்களை உயிரோடு இருக்கும் வரை வீட்டு வாசலை மிதிக்க விடவில்லை. என்னிடமும் தினகரனிடம் பேசக் கூடாது என்றும், நீங்கள் ஒருவராவது எனக்கு விசுவாசமாக இருங்கள் என்றும் அம்மா கூறினார். அப்போலோ மருத்துவமனையில் அம்மா சிகிச்சையில் இருந்தபோது 38 நாட்களுக்குபின்  சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அவரை  அழைத்து செல்லலாம் என்று அமைச்சர்களிடம் பேசியபோது அப்பல்லோ மருத்துவமனையினர் எங்கள் மீது நம்பிக்கையில்லையா என்றனர். அம்மாவிற்கு ஏதாவது ஒன்றால் தொண்டர்கள் நம் வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்றோம். 2016ம் ஆண்டு தேர்தலில் போடி தொகுதியில் எனக்கு சீட்டு தர விடாமல் தடுத்து பார்த்தனர். முடியவில்லை. அதனால் என்னை தோற்கடித்து கட்டிய வேட்டி சட்டையுடன் மீண்டும் டீக் கடையில் அமர வைக்க வேண்டும் என சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டு, அதற்கு  தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆகியோர் வேலைபார்த்தனர். ஆனால் தங்கதமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு ஆகியோருக்கு எனக்கு தேர்தலில் எவ்வளவு செலவு செய்தேனோ அதே அளவு அவர்களுக்கும் செலவு செய்தேன். எனென்றால் கட்சி ஜெயிக்க வேண்டும். நமது முயற்சியில் தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் வென்றோம். நான் யாரையும் மோசம் செய்து சம்பாதிக்கவில்லை. எனது தந்தையிடமும் பணம் வாங்காமல் கடன் வாங்கி டீக்கடை ஆரம்பித்தேன். என்னை அம்மா அமைச்சராக, முதல்வராக, கழக பொருளாளராக நியமித்து அழகுபார்த்தார். நான் அவருக்கு விசுவாசமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை அதனால் நான் போடியில் 67 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தபோது எல்லப்பட்டி முருகன், ரவீந்திரநாத்குமார் ஆகியோரை நீக்கி என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்க நினைத்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்டாக கருதாமல் இரட்டை இலை இருக்கும் இடத்தில் அ.தி.மு.கவின் சாதாரண, விசுவாச தொண்டனாக இருப்பேன். தர்மயுத்தம் தொடங்கியபோது 12 எம்.எல்.ஏக்கள் என்னோடு வந்தனர். மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தபோது அம்மா உங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நீங்கள் கட்சி, ஆட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்ட போது கட்சி பதவி போதும், அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன். ஆனால் சக அமைச்சர்கள் நீங்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரிலே அமைச்சராக உள்ளேன். அம்மா பிறந்த நாளான 24ம் தேதி தேனி மாவட்டம் முழுவதும் கட்சியினர் அவரவர் சக்திக்கு தகுந்தவாறு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றி பேசினார்.

ஒன்றிய செயலாளர் கணேசன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார்,  நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, தேனி முருகேசன்,  பெரியகுளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், பெரியகுளம் அன்பு, சந்தோசம், நாராயணன், சிவக்குமார், ராஜவேல், ஏர்செல்ரபீக், காஜாமுயுனுதீன், தேனி ஐயப்பன், பொருளாளர் வீரமணி, போடிநாயக்கனூர் விஜயபாண்டியராஜன் உள்ளிட்ட கழக  மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டாகள் கலந்து கொண்டனர்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து