முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

கோவை : காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை அடுத்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வெளியானது...

கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவிரி நடுவர் மன்றம் அப்போது தீர்ப்பளித்த போது, தமிழகத்தில் இருக்கும் நிலத்தடி நீரை கருத்தில் கொள்ளவில்லை என்றும், கர்நாடகாவை விட தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகவும், எனவே, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என்று தற்போது முடிவு செய்யப்பட்டதாகவும் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

177.25 டி.எம்.சி தண்ணீர்...

அதாவது, தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகக் கூறி 14.75 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்குக் குறைவாக ஒதுக்கிய சுப்ரீம் கோர்ட், அதனை கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக அளித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 192 டி.எம்.சி தண்ணீரில் தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் 177.25 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமை தமிழக விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

தி.மு.க. அரசுதான்...

இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர். தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்ட போது, தமிழக உரிமைகளை நிலைநாட்ட இந்த அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி ஒரு அறிக்கை வாயிலாக பதில் அளித்தார். தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது முந்தைய தி.மு.க. அரசுதான் என்று முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டி ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார்.

வரவேற்கத்தக்கவை...

இந்த நிலையில் நேற்று அவர் கோவை சென்றார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கவை. சில அம்சங்கள் ஏமாற்றம் தரக்கூடியவை. தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை மட்டும் சுப்ரீம் கோர்ட் ஒதுக்கியுள்ளது. அதாவது, 14.75 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே இந்த விவகாரங்கள்  குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

உற்சாக வரவேற்பு...

முன்னதாக கோவை சென்ற அவருக்கு விமான நிலையத்தில் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து