முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர ஏரியில் தமிழர்களின் 5 சடலங்கள் - போலீஸார் அத்துமீறல் நடவடிக்கை: மனித உரிமை குழுக்கள் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

கடப்பா : ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதில் 2 பேரின் உடல் அடையாளம் தெரிந்தன.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில், திருப்பதி-கடப்பா நெடுஞ்சாலையில் ஒண்டிமிட்டா எனும் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று காலை 7 சடலங்கள் மிதப்பதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டு, 5 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் சிலரின் சடலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இறந்தவர்களின் சடலங்களைப் பார்த்தால் அவர்கள் இறந்து சுமார் 2 அல்லது 3 நாட்கள் ஆகி இருக்கலாமென கருதப்படுகிறது. சிலரின் உடல்களில் கை,கால் முதலான உறுப்புகளில் காயங்கள் உள்ளன. சிலர் செருப்பு அணிந்து உள்ளனர். அவர்களது பைகளும் தோளில் உள்ளன. அனைத்துச் சடலங்களும் ஏறக்குறைய ஒரே இடத்தில் கிடந்தன. இந்த ஏரி முழுவதும் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. ஏரி மற்றும் ஏரியைச் சுற்றிலும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. மேலும், இந்த ஏரியில் அதிகபட்சமாக 6 அடி ஆழம் மட்டுமே தண்ணீர் உள்ளதாக அப்பகுதி கிராமத்தினர் கூறுகின்றனர்.

போலீஸார் கூறுவதுபோல், போலீஸாரிடமிருந்து தப்பி ஓடி செல்லும்போது ஏரியில் குதித்து மறுகரையில் உள்ள வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்பே இல்லை. ஏனெனில், இந்த சேற்றில் ஓடக்கூட முடியாது என்கிறார்கள். அப்படியே ஓடினாலும், முன்னால் செல்பவர் சேற்றில் சிக்கி இருந்தால், பின்னால் வந்தவர்கள் அனைவரும் அதே வழியில் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆதலால், இது வேண்டுமென்றே செய்த சதி என்றே தெரியவந்துள்ளது என்கிறார்கள்.

ஏற்கெனவே திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டனர். இதனால், இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் இது மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆணையமும் எச்சரித்தது. ஆனால் இதனை ஆந்திர அரசு கண்டுக்கொள்ளவில்லை. செம்மரம் கடத்தும் கும்பலை கட்டுப்படுத்த ஆந்திர போலீஸார் இம்முறை என்கவுன்டர் செய்யாமல், இவர்களை அடித்துக் கொன்று ஏரியில் வீசியிருக்கலாமென கூறப்படுகிறது.

இந்நிலையில், கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 சடலங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை போலீஸார் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்தனர்.

இறந்தவர்களின் பைகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு பெண், ஆண் ஆகியோரின் புகைப்படங்களும், சில செல்போன் எண்களும் இருந்தன. ஒரு காகிதத்தில் ராமு, குமார், சேலம் என எழுதி அவர்களின் செல்போன் எண்களும் உள்ளன. மற்றொரு காதிகத்தில் சக்தி என எழுதப்பட்டு அதில் செல்போன் எண் குறிப்பிட பட்டுள்ளது. மேலும் “ஸ்ரீ லலிதா” டெக்ஸ்டைல்ஸ், கருமந்துறை எனும் ஒரு மஞ்சள் பையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த அடையாளங்களை வைத்து நேற்று காலை முதல் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன், முருகேசன் ஆகிய இருவர் என அடையாளம் தெரியவந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு ஆந்திர போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்களின் விவரங்கள் தெரியவேண்டியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விவரங்கள் தெரிந்தாலோ அல்லது தெரிந்து கொள்ள வேண்டியிருந்தாலோ 91211 00565, 91211 00581, 91211 00582 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாமென கடப்பா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம்

பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட கடப்பா மாவட்டம், ரிம்ஸ் அரசு மருத்துவமனை முன், நேற்று காலை மனித உரிமை சங்கத்தினர் அதன் தலைவர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து